நல்வரவு

வணக்கம் !

Tuesday, 24 January 2017

போராளிகளுக்கு வீரவணக்கம்!

ஏழு நாட்கள் கடுங்குளிரில், வெயிலில் போராடி, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுக்காகப் போராடிய, அத்தனைப் போராளிகளுக்கும், வீரவணக்கம்!

பொதுப் பிரச்சினைக்காக வீதியில் இறங்கிய ஒரு வாரத்துக்குள், அரசுக்குக் கடும் நெருக்குதல் கொடுத்து, நிரந்தரத் தீர்வு கண்டது இமாலயச் சாதனை!

வெற்றியை முழு மனதுடன் கொண்டாட முடியாமல், இறுதி நாளில் வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டி, அறவழியில் போராடிய மாணவர்களைத் தடியடி நடத்திக் கொடுமைப்படுத்தியது, கடும் கண்டனத்துக்குரியது.

வன்முறையை முதலில் தூண்டியது யார் என்ற உண்மையை, அடுத்தடுத்து வெளியாகும் (வேலியே பயிரை மேயும்!) வீடியோ காட்சிகள், அம்பலப் படுத்துகின்றன.  வன்முறையில் ஈடுபட்டதாய்க் கூறித் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளிலிருந்து, மாணவர்களை நிபந்தனையின்றி, அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

கூட இருந்தே குழிபறிக்கும் நண்பர்(!)களையும், காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களையும், முதுகில் குத்தும் கருணாக்களையும், அரசு உத்தரவின் பேரில் நிமிடத்துக்கு நிமிடம், நிறம் மாறும் காவல்துறையையும் அடையாளங்கண்டு கொள்ளவும், புதிய படிப்பினையைப் பெறவும் இப் போராட்டம், இவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஏட்டில் பெற முடியாப் படிப்பினை இது!

அடுத்தமுறை களம் புகுமுன், இவர்களைக் களையெடுப்பது மிகவும் முக்கியம்!  கண்ணுக்குத் தெரியும் எதிரிகளை விட, ஆபத்தானவர்கள் இவர்கள்!

மலையாளிகள், பஞ்சாபியரைப் போல, இனவுணர்வு சிறிதும் இல்லாதவர்கள் தமிழர்கள் என்ற வாதத்தைப் பொய்யாக்கும் விதத்தில், உலகத்தமிழர் அனைவரையும், தமிழன் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்தது தான், நீங்கள் செய்த முதல் சாதனை!

காலங்காலமாகத் தமிழகம் வஞ்சிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வந்ததன் விளைவாகத தன்னிச்சையாகக் கிளர்ந்தெழுந்து தான், இந்த இளைஞர் எழுச்சி. அதற்கு ஜல்லிக்கட்டு என்ற தீப்பொறி உதவியிருக்கிறது.

இவர்கள் தலைமையில், எதிர்காலத் தமிழகம் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை, முதன்முறையாக எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.(படம் நன்றி – இணையம்)

Friday, 20 January 2017

நம்பிக்கையூட்டும் இளைஞர் எழுச்சி


இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் தெரியவில்லை; பாரம்பரிய உணவு வகைகளைப் புறந்தள்ளி பீட்ஸா, பர்கர் தின்பவர்கள்; முகநூலில் முகம் தொலைப்பவர்கள், வார இறுதியில் குடித்து விட்டுக் கூத்தடிப்பவர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை, முறியடிக்கும் விதமாக, நம் இளைய சமுதாயம், ஜல்லிக்கட்டு விஷயத்தில், பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்ற வாதத்துக்குள், நான் போக விரும்பவில்லை; ஆனால் அது தேவையில்லை என்ற மாற்றுக்கருத்துக் கொண்டோரும், மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு, இளைஞர்களின் இந்த மாபெரும் எழுச்சி, வரலாறு படைத்திருக்கிறது! 

ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது தமிழர்களாகிய நாம் தானே தவிர, பீட்டாவுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்று இவர்கள் கேட்பதில், நியாயம் இருக்கவே செய்கிறது.
வரலாறு காணாத இப்போராட்டத்தில், என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயங்கள்:-

முதன்முறையாகப் பெருமளவில் பெண்களும், இதில் பங்கெடுத்திருப்பது;

ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, புரொபஷனல் கல்லூரி மாணவர்களும் களம் இறங்கியிருப்பது;

மாணவர்கள் மட்டுமில்லாமல், வேலையிருப்பவர்களும் இதில் கலந்து கொண்டிருப்பது;

தலைவன் என்று யாருமின்றி, இளைஞர்கள் தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றிருப்பது;

உணர்ச்சி மிகுந்த கூட்டம், வன்முறையில் ஈடுபடாமல், அமைதியான வழியில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது;

பொதுச்சொத்துக்கு எந்தச் சேதமும் விளைவிக்காதது;

(சில சம்பவங்களைத் தவிர) இரயில் மறியல், போக்குவரத்து மறியல் என்று செய்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதது;

பிரச்சினையில் மூக்கை நுழைத்து, அரசியல் இலாபம் காணத் துடிக்கும் அரசியல்வாதிகளை ஓரங்கட்டியிருப்பது;

நடிக, நடிகையருக்கு முக்கியத்துவம் கொடுக்காதது;

ஜாதி, சமய வேறுபாடின்றி, அனைவரும் தமிழன் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடுவது;

நான்கு நாட்களுக்கு மேலாகியும், இடைக்காலத்தீர்வு தேவையில்லை, நிரந்தரத் தீர்வு வேண்டும் என்ற முடிவுடன் இறுதிவரைப் போராடும் குணம்;

ஏதாவது ஒரு முடிவு எடுத்தே தீர வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆட்சியாளர்களை உள்ளாக்கியிருப்பது;

போராடினால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை அனைவர் மனதிலும் விதைத்திருப்பது;

உலகத் தமிழர் அனைவரும், ஒருமித்த குரலில் ஆங்காங்கே இணைந்து போராடித் தம் ஆதரவை நல்கியிருப்பது;

தேவையென்றால் வீதியில் இறங்கிப் போராடத் தயங்க மாட்டோம் என்ற எச்சரிக்கை மணியை, ஆட்சியாளர்களின் மனதில் அடித்திருப்பது.

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.  பொதுப் பிரச்சினைக்காக இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடுவது, நம்பிக்கை தரும் நல்லதொரு துவக்கம்.

இம்மாபெரும் எழுச்சி இத்துடன் நின்றுவிடாமல், தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!


(படம் நன்றி- இணையம்)
        


  

Sunday, 16 October 2016

பாதை மாறிய பயணங்கள்
(01/07/2011 அன்று நிலாச்சாரலுக்காக எழுதியது)

பயணம் - 1

ஐந்தாம் வகுப்பிலிருந்து நெருங்கியத் தோழியாயிருந்த ராஜிக்கும், எனக்கும் ஏழாம் வகுப்பில் சண்டை வந்து பிரிந்து விட்டோம்.  சண்டை வந்ததற்கான காரணம் என்ன வென்று நினைவில்லை.  அப்போது பிரிந்த நாங்கள், பள்ளியிறுதி வகுப்பு வரையில் பேசிக்கொள்ளவேயில்லை.  என் நட்பு வட்டம், படிக்கும் கோஷ்டி என்றும் அவளுடையது அரட்டை கோஷ்டி என்றும் அமைந்து,  அவளைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டமே.
 

இன்னும் சில நாட்களில், பிரியப் போகிறோம் என்பதாலும், இனிமேலும் பேசாதிருக்கக் கூடாது என்று சக நண்பிகள் அறிவுறுத்தியதாலும், பள்ளி முடியும் தருவாயில், பேசத் துவங்கினோம்.  ஆனால் நாலைந்து வருடங்களில், எங்களுக்குள் பெரிய இடைவெளி ஏற்பட்டு பழைய நட்பு முற்றிலும் காணாமல் போய் விட, பேருக்குத்தான் பேசிக் கொண்டோம்.  கீழ் வகுப்பில் நன்றாய்ப் படித்துக் கொண்டிருந்த ராஜிக்கு, மேலே செல்லச் செல்ல படிப்பில் நாட்டம் குறைந்ததின் காரணமாய், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அவள் வெற்றி பெறவில்லை.

நான் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், என் தந்தைக்குப் பக்கத்து ஊருக்கு மாற்றல் வரவே,  கிராமத்திலிருந்து அவ்வூருக்குச் சென்று விட்டேன்.

அதே ஊரில் இருந்த டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து, அவள் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஓரிரு முறை அவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த்து.  தினமும் கிராமத்திலிருந்து நான் இருந்த ஊருக்குப் பேருந்தில் வந்து போய்க் கொண்டிருந்தாள்.  பார்க்கும் போது பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வோம்.

டுடோரியலில் கூடப் படிப்பவன் ஒருவனை அவள் விரும்புவதாகவும், அவனையே அவள் மணமுடிக்கப் போவதாகவும் வேறொருத்தி மூலமாகக் கேள்விப்பட்டேன். 

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் மதியம் எங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த போது, பிணவண்டி ஒன்று, ஒரு சடலத்தை ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்த்தேன்.  அதற்குப் பின்னால் நடந்து போனவரைப் பார்த்த போது பகீரென்றது.  ராஜியின் அண்ணன் (அவர் எனக்கு நன்கு அறிமுகமானவர்) அந்த வண்டிக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்.

அவளது காதல் பெரிய பிரச்சினையாகி, கடைசியில் அவள் தற்கொலை செய்து கொண்ட விபரமும், பிணப்பரிசோதனை முடிந்து மருத்துவமனையிலிருந்து அவளது உடலை எடுத்துச் சென்ற விபரமும் பின்னர் எனக்குத் தெரிய வந்தது.
       
என் தலைமுறையின் முதல் சாவு என்பதாலும், அது தற்கொலை என்பதாலும் அவள் மரணம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. எனக்கும் அவளுக்கும் பிரிவு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவளது வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமோ? என்று அடிக்கடி நான்  நினைத்துப் பார்ப்பதுண்டு.  இளம் வயதில் மனதை அலை பாய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி யிருந்தால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்காது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.


பயணம் - 2

கல்லூரியில் என்னுடன் படித்த சாருவும், நானும் ஒரே தெருவில் வசித்தமையால் கல்லூரிக்குச் சேர்ந்தே போவோம், சேர்ந்தே வருவோம். 
நாங்கள் போகும் வழியில் பரட்டைத் தலையன் ஒருவன் தினமும் நின்று கொண்டு ஏதாவது காமெண்ட் அடிப்பான்.  அவனைப் பார்த்தாலே எனக்குப் பற்றிக் கொண்டு வரும்.  அவனைப் பற்றி கன்னா பின்னாவென்று சாருவிடம் திட்டித் தீர்ப்பேன்.

வழக்கமாக போகும் தெருவை விடுத்து, அடுத்த நாள் வேறு ஒரு வழியில் சென்றால், அங்கும் அவன் நிற்பான்.  நாம் பாதை மாற்றும் விஷ்யம் இவனுக்கெப்படி தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சரியம். என்னோடு சேர்ந்து சாருவும் வியப்புத் தெரிவிப்பாள்.  நீண்ட நாட்கள் கழித்துத் தான் தெரிந்தது, சாரு அவனை விரும்பிய விஷயம். 

அந்தத் தடியன்,  முன்னாள் மந்திரியின் மகன் என்றும் ஆண்கள் கல்லூரியில் ஏதோ டிகிரி படித்தான் என்றும் பிற்பாடு தெரிந்து கொண்டேன். 

அவனை நான் திட்டுவது பற்றியும், பாதை மாற்றுவது பற்றியும்  சாருவே அவனிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ஒன்றும் தெரியாதவள் போல் நடித்திருக்கிறாள் என்றறிந்தபோது எனக்கு ஆத்திரம் தாங்கவில்லை. 

படிப்பு முடியும் வரை அவளாகச் சொல்வாள் என எதிர்பார்த்தேன்.  ஆனால் அவள் கடைசி வரை என்னிடம் உண்மையைச் சொல்லவேயில்லை. என்னிடம் அவள் சொல்லியிருந்தால்,   பணக்காரப் பசங்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுது போக்கு; ஒழுங்காப் படிச்சி முன்னேறும் வழியைப் பாரு, என்று அவளை அறிவுறுத்தியிருப்பேன். 

அவள் என்னிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தில் நானாக போய் மூக்கை நுழைத்துக் கடிந்துரைப்பது எனக்குப் பிடிக்கவில்லை.  என்னை அவள் ஏமாற்றியது நெஞ்சில் ஒரு முள்ளாக நெருடிக் கொண்டிருந்ததால், படிப்பு முடிந்த பிறகு அவளுடன் தொடர்பை நீட்டிக்க நான் விரும்பவில்லை.


கடந்த ஆண்டு ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது,  என்னையே உற்றுப் பார்த்தபடி ஒருத்தி அருகில் வந்து,  நீ கலை தானே? என்றாள்..

ஆமாம், நீங்கள்? என்று கேட்க வாயெடுத்த நான், ‘சாரு, நீயா என்று கூவி விட்டேன் மகிழ்ச்சி பொங்க.. இத்தனை ஆண்டுகளாக அவள் மேல் எனக்கிருந்த கோபம், வருத்தம் எல்லாம் அந்தக் கணத்தில் மாயமாய் மறைந்து விட்டது.  பல வருடங்கள் கழித்து நண்பியைச் சந்திக்கும் பேருவகை, மன முழுக்க நிறைந்திருந்தது. 

கண்களில் குழி விழுந்து, கழுத்து நீண்டு ஆள் மிகவும் இளைத்துத் துரும்பாக மாறிவிட்டிருந்தாள்.  கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.  நான் பார்த்த அந்தத் துரு துரு சாரு எங்கே?

இந்த ஊரில் தான் நீயும் இருக்குறியா? என்றாள்.

ஆமாம். நீ?

நானும் இங்கத் தான் இருக்கேன்.

எங்க வேலை பார்க்குறே?

என் வேலை பற்றியும், என் குடும்ப விபரங்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.

நீ?

ஒரு பெண்கள் விடுதியில் காப்பாளராக இருப்பதாகவும் அங்கேயே அவளும் அவள் பெண்ணும் தங்கியிருப்பதாயும்  தெரிவித்தாள். சாப்பாடும் தங்குமிடமும் இலவசம் என்றும் மாதம் ஆயிரத்து ஐநூறு சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்தாள்.  

சொந்தத்தில் தனக்குத் திருமணம் ஆனது பற்றியும், தன் மீது சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக, கணவன் தன்னை விவாகரத்து செய்து விட்டது பற்றியும் சொன்னாள். 

(அவள் விரும்பிய மந்திரி மகன்,  இவளைக் கைவிட்டு பெரிய பணக்காரர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட விபரத்தை நான் அறிந்திருந்தும்,  அது பற்றி எதுவும் அவளிடம் கேட்கவில்லை.) 

வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.  என் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, வேறு ஒரு சமயம் வருவதாகத் தெரிவித்தாள். 

அவளிடம் பேசிக்கொண்டிருந்த சமயம், நான் ஏற வேண்டிய பேருந்து வந்தது. ஓடிப் போய்ப் படிகளில் ஏறிக் கொண்டே, உன்னோட பஸ் எப்ப வரும் சாரு?  என்றேன்.

என் பஸ்ஸை எப்பவோ நான் தவற விட்டுட்டேன், என்றாள் சாரு, எங்கோ தொலைதூரத்தில் தன் பார்வையைப் பதித்தபடி.


(படம் - நன்றி -  இணையம்)