நல்வரவு

வணக்கம் !

Tuesday 27 March 2012

மூன்று விரல்


மூன்று மாதங்களாக கோமாவில் கிடந்த தந்தை, கண் திறந்து பார்த்தவுடன், கண்ணன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அப்பா என்னைப் பாருங்க, நான் யாருன்னு தெரியுதாப்பா?  என்று கேட்டவன், அம்மா, சீக்கிரம் வாங்க. அப்பா கண் முழிச்சிப் பார்க்கிறாங்க,. என்று கூப்பிட்டான்

அடுப்படி வேலையை அப்படியே போட்டுவிட்டு, தன் கைகளை முந்தானையில் துடைத்தபடி ஓடி வந்தார் பார்வதி.

என்னங்க, நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடலே. .  பாரு, பாருன்னு நொடிக்கு முந்நூறு வாட்டிக் கூப்பிடுவீங்களே, அந்தப் பாரு வந்திருக்கேன், பாருங்க       

மனைவியை ஒரு நிமிடம் பார்த்து விட்டு, கண்ணனை அருகில் வருமாறு கைகாட்டினார் பெரியவர்.

அவன் பக்கத்தில் வந்தவுடன், தம் மூன்று விரல்களைச் சேர்த்துக் காட்டி, என்னவோ சொல்ல முயன்றார். வாய் கோணிக்கொண்டு சத்தம் எதுவும் வெளிவரவில்லை.

மூணுமாசமா இப்படிக் கிடக்கிறேனான்னு கேட்கிறீங்களா?  ஆமாம்பா.  திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க.  நான் அப்ப ஆபீசுல இருந்தேன்.  அம்மா தான் போன் பண்ணிச் சொன்னாங்க.  உடனே கொண்டு போய் ஆஸ்பத்திரியில சேர்த்தோம்.  ஒரு மாசம் வைச்சிருந்திட்டு, வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடுங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரு.

எப்ப பிரக்ஞை வரும்னு டாக்டரைக் கேட்டோம்.  எப்ப வரும்னு நிச்சயமாச் சொல்ல முடியாது.  ரெண்டு மாசத்திலேயும் நினைவு திரும்பலாம். இல்லே கடைசி வரைக்கும் திரும்பாமலேக் கூட போயிடலாம்னு சொன்னாரு அவரு.  நல்ல வேளையா மூணே மாசத்துல ஒங்களுக்கு நினைவு திரும்பினதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா, என்றான் கண்ணன்.

தம்பி, அப்பாவுக்கு நினைவு வந்துட்டா, அங்காளம்மனுக்கு மாவிளக்கு போடறதா வேண்டியிருக்கேன்.. நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போய், ஒடனே அதை நிறைவேத்திடணும்பா.

அதுக்கென்னம்மா..  அடுத்த வாரமே நிறைவேத்திடுவோம்

ஆளாளுக்குப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவர், தம் தலையில் அடித்துக் கொண்டு, தாம் சொன்னது அதுவல்ல என்பது போல், மீண்டும் மூன்று விரலைச் சேர்த்துக் காட்டி  ஏதோ சொல்ல முயன்றார்.

என்னப்பா சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியலியே?

“தம்பி, ஒங்கப்பா என்ன சொல்றார்னு எனக்குப் புரிஞ்சிட்டுது.  தம் பொண்ணுங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படறாருன்னு நினைக்கிறேன்.  ஒடனே மூணு தங்கச்சிகளையும் வரச் சொல்லு.  எப்பவுமே ஒங்கப்பாவுக்கு அதுங்க மேல தான் உசிரு.

அப்படியாப்பா? தங்கச்சிகளைத் தானே பார்க்கணும்? ஒடனே வரச் சொல்றேன்பா.

கிழவர் களைப்பு மிகுதியால் கண்களை மூடிக் கொண்டார்.

மறுநாள் அவரது மூன்று பெண்களும், குடும்ப சகிதம் அங்கு  ஆஜராகினர். 

அப்பா எங்களைப் பாருங்கப்பா.  எங்களைத் தெரியுதாப்பா? என்றனர் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டு.

பெரியவர் கண்களைத் திறந்து எல்லோரையும் பார்த்தார்.  அடையாளம் தெரிந்து கொண்டது போல், அவரது முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. 

மறுபடியும் மூன்று விரலைக் காட்டி, அவர்களிடம் ஏதோ சொல்ல முற்பட்டார்.

அண்ணா, இங்க வாயேன். அப்பா ஏதோ மூணுன்னு காட்டறாரே! நாங்க தான் வந்துட்டோமே, இன்னும் ஏன் மூணுன்னு காட்டறார்?

திடீரென்று பெரியவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.  டாக்டர் உடனடியாக வரவழைக்கப்பட்டுச் சிகிச்சை செய்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

அப்பாவின் கடைசி ஆசை என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் போய் விட்டதே, என்று கண்ணனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

தன் நண்பர்களிடம் அது பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தான் .  பக்கத்து ஊரில் குறி சொல்லும் பெண்ணொருத்தி இருப்பதாகவும்  ஆவியுடன் பேசும் சக்தி வாய்க்கப்பெற்ற அவள், அவனது  தந்தை ஆவியுடன் பேசிக் கடைசி விருப்பத்தைக் கேட்டுச் சொல்லிவிடுவாள் என்றும் அவன்  நண்பனொருவன் கூறக் கேட்டு, அவ்வூருக்குப் பயணம் மேற்கொண்டான் கண்ணன்.

சாராயம் குடித்து விட்டு ஆடிக்கொண்டிருந்த அப்பெண்ணிடம்  தான் வந்த விஷயத்தைச் சொன்னான்.

குறி சொல்வதற்கு ஐநூறு ரூபாய் தட்சிணையாகப் பெற்றுக் கொண்டவள்,
ஒங்கப்பா ஆவியோட பேசிட்டுச் சொல்றேன்.  அதுவரைக்கும் வெளியில ஒட்கார்ந்திரு, என்றாள்.

சாமி வந்தவள் போல் உடுக்கையைக் கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் ஆடியவள், அவனைக் கூப்பிட்டு,  ”ஒங்க ஊர்ல உள்ள மாரியம்மன் கோயில்ல கும்பாபிஷேகம் நடந்து மூணு வருஷம் ஆயிடுச்சாம்.  அதனால உடனே அந்தக் கோயிலைப் புதுப்பிச்சிக் கும்பாபிஷேகம் பண்ணச் சொல்றாரு ஒங்கப்பா, என்றாள்.

ஓ இவ்ளோ தானா?  எப்படியோ அப்பாவோட கடைசி ஆசையைத் தெரிஞ்சிக்கிட்டேன்.   அதை எப்பாடு பட்டாவது, ஒடனே பூர்த்தி பண்ணிடணும் என்ற எண்ணத்துடன் வீட்டுக்குத் திரும்பியவன், அன்றிரவு நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் காலை அம்மா சொன்ன தகவல், கண்ணனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

டேய் தம்பி, இங்க வாயேன்.  அந்தக் குறி சொல்றவ சொன்னதை இங்க யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க.  மாமாவுக்குச் சாமி பக்தி அவ்வளவாக் கிடையாது.  அதனால  அவரு கும்பாபிஷேகம் பத்திச் சொல்லியிருக்க சான்ஸே இல்லை.  இந்த வூட்டை வித்து தன்னோட மூணு பொண்ணுங் களுக்கும் பிரிச்சிக் கொடுக்கணும்னு தான் மாமா மூணு விரலைக் காட்டியிருக்காரு,ன்னு பெரிய மாப்பிள்ளை சொல்றாரு.  ஒடனே மத்த ரெண்டு பேரும் அவரு கூடச் சேர்ந்துக்கிட்டு, ஆமாம் சாமி போடறாங்க. 

பாவி மனுஷர், நினைவு திரும்பாமலே போயிருக்கக் கூடாதா?  போகும் போது இப்படி மூணு விரலைக் காட்டிட்டு ஆளாளுக்கு ஒன்னு சொல்ற மாதிரி, பண்ணிட்டுப் போயிட்டாரே!  மூணு பொண்ணுகளுக்கும் நகைநட்டு செஞ்சுப் போட்டு, சீர் செனத்தி செஞ்சு நல்ல விதமாக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு.  இப்ப ஒனக்குன்னு இருக்கிறது, இந்த ஒரு வீடு மட்டும் தான்.  இதையும் வித்து அவங்களுக்குப் பங்குப் போட்டுக் கொடுத்துட்டு நீ என்ன பண்ணுவே தம்பி?

சரிம்மா.  மெதுவாப் பேசுங்க. அப்பாவோட கடைசி ஆசை அது தான்னு அவங்க சாதிச்சாங்கன்னா, வித்துக் கொடுக்கிறதைத் தவிர வேற வழியில்லை. கருமாதி முடியறவரைக்கும் இதைப் பத்தி எதுவும் பேச வேணாம்.  அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு  யோசிக்கலாம்மா.

அப்பா படுக்கையில் கிடந்த போது, கணவருக்கு அலுவலகத்தில்  விடுப்பு கிடைக்கவில்லை,, பிள்ளைகளுக்குத் தேர்வு நடக்கிறது என்று பலப்பல காரணங்களைச் சொல்லி, வீட்டுக்கு வந்து தங்க மறுத்த தங்கைகள், கருமாதி வரை இங்கேயே பழியாகக் கிடந்து வீட்டை விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகே ஊருக்குத் திரும்புவது என்ற முடிவுடன் இருந்தனர்.

கருமாதி முடிந்த மறுநாள், பதிவுத் தபாலில் வந்த அந்தக் கடிதம் கண்ணன் உட்பட அனைவரையும் ஒரு சேரக் கலங்கடித்தது.

அவன் தந்தை, வீட்டின் பெயரில் வாங்கியிருக்கும் மூன்று லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஒரு மாதத்துக்குள் கட்ட வேண்டும்.  தவறினால் வீடு ஏலத்துக்கு விடப்பட்டு நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என்ற வாசகத்துடன் பக்கத்து ஊரிலிருந்த வங்கியிடமிருந்து வக்கீல் நோட்டீசு வந்திருந்தது.

தான் வாங்குன கடனைப் பத்திச் சொல்லத்தான், அப்பா அந்தப் பாடு பட்டுருக்கிறாரு.  அதைப் புரிஞ்சிருக்கிற சக்தி  நமக்கில்லாம போயிட்டுது, என்று வருந்தினான் கண்ணன்.

கண்ணா, இப்ப நம்மக்கிட்ட மூணு லட்சம் ஏது?  அந்த நோட்டீசை எடுத்துட்டுப் போய், என்ன செய்யலாம், ஏது செய்யலாம்னு  குமாரைப் பார்த்துக் கேட்டுட்டு வா.  இந்த மாதிரி நாம கஷ்டப்படுற நேரத்துல, நிச்சயமா அவன் ஒனக்கு உதவி செய்வான்.

நானும் அவனைத் தான் போய்ப் பார்க்கணும்னு நினைச்சிக் கிட்டிருந்தேன்மா, நீங்களும் அதையே சொல்லிட்டீங்க. லோன் பத்தியெல்லாம், எனக்கு ஒன்னுமே தெரியாது. பாங்க் விஷயமெல்லாம் அவனுக்குத் தான் அத்துப்படி.  நாளைக் காலையில அவனைப் போயிப் பார்த்துட்டுத் தான் மறுவேலை.

கணவன்மார்க்கு அலுவலகத்தில் அவசர வேலையிருப்பதாகவும், குழந்தைகளுக்குப் படிப்பு கெடுவதாகவும் காரணங்களைச் சொல்லிவிட்டு கண்ணனின் தங்கை குடும்பத்தினர் அன்று மாலையே ஒருவர் பின் ஒருவராக ஊருக்குக் கிளம்பினர்.   
  
மறுநாள் தன்னைப் பார்க்க வந்த கண்ணனை, இன்முகம் காட்டி வரவேற்றான் குமார்.

வாடா, காரியமெல்லாம் நல்ல விதமா முடிஞ்சுதா?  நானே இன்னிக்குச் சாயந்திரம், ஒங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன்.  அதுக்குள்ள நீயே வந்துட்டே

அதெல்லாம் நல்ல விதமா முடிஞ்சிடுச்சிடா.  ஆனா... பாங்க்லேர்ந்து வக்கீல் நோட்டீசு ஒன்னு வந்திருக்கு.  அப்பா எனக்குத் தெரியாம கடன் வாங்கியிருந்திருக்கிறாரு. இது வந்த பிறகு தான், அந்த விஷயமே எனக்குத் தெரிஞ்சுது. முன்னமே தெரிஞ்சிருந்தா, கொஞ்சங் கொஞ்சமா வட்டியாவது கட்டிட்டு வந்திருப்பேன். 

இப்ப எங்கிட்டே அவ்ளோ பணம் இல்லடா. வெளியில வட்டிக்கு  வாங்கி இந்த லோனை அடைச்சிடலாமா?  இல்லே பாங்கில போய் இன்னும் கொஞ்சம் நாள் நீட்டிக்கச் சொல்லிக் கேட்கலாமா? எல்லாத்துக்கும் நீ தான் எனக்கு உதவி செய்யணும். ஒன்னை நம்பித் தான் வந்துருக்கேன்

சரிடா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நீ எதுக்கும் கவலைப்படாதே.  இந்த நோட்டீசு வந்தவுடனே தங்கச்சிங்க எல்லாரும் ஊருக்குக் கிளம்பியிருப்பாங்களே?

ஆமாண்டா.  ஒனக்கெப்படித் தெரியும்? 


இந்த நோட்டீசை அனுப்பினதே நான் தான்டா. என்னோட நண்பன் ஒருத்தன் வக்கீலா இருக்கான்.  அவன்கிட்டச் சொல்லி சும்மா ஒரு பாங்க் பேரையும், நம்பரையும் போட்டு, ஒங்க விலாசத்துக்குத்  தபால் அனுப்பச் சொன்னேன். 

கருமாதிக்கு வீட்டுக்கு வந்தப்ப,  ஒன் தங்கச்சி மாப்பிள்ளைங்க வீட்டை வித்தா ஒவ்வொருத்தருக்கும் இவ்ளோ கிடைக்கும், அவ்ளோ கிடைக்கும்னு கணக்குப் போட்டுக்கிட்டிருந்தாங்க.  கடன்னு தெரிஞ்சவுடனே சத்தம் போடாம இடத்தைக் காலி பண்ணிடுவாங்கன்னு நினைச்சேன்.  அதே மாதிரி நடந்துட்டுது.

எப்படியோ எல்லாம் நல்ல விதமா முடிஞ்சுது. இதைக் கிழிச்சிக் குப்பைக் கூடையிலப் போட்டுட்டு, இனிமே நீ நிம்மதியா இருக்கலாம்

அப்படியா? எல்லாம் ஒன் வேலை தானா?  வக்கீல் நோட்டீசுன்னவுடனே நான் ரொம்பவே பயந்துட்டேன்.  ரொம்ப நன்றிடா.  வரும் போது மூணு லட்ச ரூபாயை எப்படி அடைக்கப் போறோம்னு கவலைப் பட்டுக்கிட்டு வந்தேன்.  கடன் இல்லேன்னு தெரிஞ்சதும், ரொம்ப சந்தோஷமா இருக்குடா.  ஆனா அப்பா கடைசியா சொல்ல நினைச்ச விஷ்யம், இதுவும் இல்லேன்னா..................?

டேய்! டேய்! மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?  ஒங்கப்பா உயிரோடு இருந்த வரைக்கும், ஒரு மகனா நீ செய்ய வேண்டிய கடமையைத் திருப்தியா செஞ்சிட்டே.  நினைவு திரும்பாமலே, அவரு இறந்து போயிருந்தா, என்ன பண்ணியிருப்பே? அந்த மாதிரி நினைச்சி, இதோட அந்த விஷயத்தை மறந்துடு. அது தான் ஒனக்கும் நல்லது, ஒன் குடும்பத்துக்கும் நல்லது.

சரிடா. மறக்க முயற்சி செய்றேன்.  இந்தப் பிரச்சினையைத்   தீர்த்து வைச்ச ஒனக்கு, எப்படி நன்றி சொல்றதுன்னு தான் தெரியலை.    

சரி சரி. ரொம்ப உணர்ச்சி வ்சப்படாதே. நீ நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்ல, ஒங்கம்மாவுக்குத் தான். 

அம்மாவுக்கா?  என்னடா சொல்றே?

ஆமாம்டா.  வூட்டு மேல கடன் இருக்கிற மாதிரி, ஒரு நோட்டீசு அனுப்ப முடியுமான்னு கேட்டு, எனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்ததே அவங்க தான்!
   

(உயிரோசை இணைய இதழில் எழுதியது)







Tuesday 20 March 2012

’இன்று சிட்டுக்குருவி தினம்’


சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமாஎன்னை
விட்டுப் பிரிஞ்சி போன கணவன் வீடு திரும்பல"

இந்தப் பழைய சினிமாப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? சிட்டுக் குருவியைத் தன் தோழியாக நினைத்து தன் கவலையைப் பகிர்ந்து கொள்கிறாள் பெண்ணொருத்தி. 

'காக்கை குருவி எங்கள் ஜாதி,' என்ற பாரதியின் பாட்டில் குருவி என்பது இந்தச் சிட்டுக்குருவியையே குறிக்கிறது.  ஏனெனில் காகமும், சிட்டுக் குருவியும் மனிதரின் வீடுகளை அண்டியே பிழைப்பவை. நம் வீடுகளைச் சுற்றியே நம் இளம் வயது நண்பர்களாக எந்நேரமும் திரிந்து கொண்டிருந்த இந்தச் சிட்டுக்குருவிகளுக்கு நம் மலரும் நினைவுகளில் சிறப்பான ஒரு தனியிடம் உண்டு.

முற்காலத்தில் நம் வீடுகள் ஓட்டு வீடுகளாயிருந்தபடியால் பரண்கள், மச்சிகள், சந்து இடுக்கு என இவை கூடுகட்டுவதற்கு வசதியாக இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்குப் பின்புறம் இருந்த செடி கொடி மரங்கள் நிறைந்த தோட்டமும்இவற்றின் இனப்பெருக்கத்துக்குத் துணை செய்தன. ஆனால் இப்போது கான்கிரீட் வீடுகளில் இவை கூடு கட்ட மறைவிடம் ஏதுமில்லை. மேலும் அடுக்கக வீடுகள் பெருகி வரும் இந்நாளில் தோட்டத்திற்கு ஏது இடம்?  

நான் சிறுமியாக இருந்த போது முற்றத்தில் காய வைத்திருக்கும் நெல்லைக் கொத்தித் தின்ன இச்சிட்டுக்குருவிகள் கூட்டங் கூட்டமாக வரும்.  இப்போதெல்லாம் இக்குருவியைப் பார்ப்பதே மிகவும் அரிதாய் ஆகிவிட்டது. 

நம்மூரில் இக்குருவியின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று தான் இது நாள் வரை நான் எண்ணியிருந்தேன்.  ஆனால் உலகமுழுதுமே இந்த இனம் அழிவிற்குள்ளாகி தற்போது மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ளதாம்.

அழிந்து வரும் புலி, யானை போன்ற விலங்கினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  ஆனால் சிட்டுக்குருவி போன்று அழிந்து வரும் பறவை யினங்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை.  செல்போன் கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சும் இந்தப் பறவை இனத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்கிறார்கள். 

இக்குருவி இனத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றும் நோக்கத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி உலக முழுதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆண்டு சிட்டுக்குருவி தினத்தின் கரு என்ன தெரியுமா?

WSD theme: CHIRP FOR THE SPARROW! TWEET FOR THE SPARROW!

இது பற்றிய விபரங்கள் கொண்ட வலைத்தளத்தின் முகவரியைக் கீழேக் கொடுத்திருக்கிறேன்:-  

சிட்டுக்குருவியின் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் இதனைக் அழிவிலிருந்து எப்பாடுபட்டாவது மீட்பது தான்.   இதற்கு நாம் செய்ய வேண்டியவை என்று இத்தளத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தகவல்கள்:-

1. இது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் நம் பிளாக்,எஸ்.எம்.எஸ், பேஸ் புக், என எந்தெந்த வழிகளிலெல்லாம் முடியுமோ, அந்தந்த  வழிகளின் மூலம் ஏற்படுத்துவது.

2. இன்றிலிருந்து துவங்கி தினந்தினம் அரிசி போன்ற தானிய வகைகளை ஒரு கிண்ணத்திலும், சுத்தமான தண்ணீரை ஒரு கிண்ணத்திலும் வைக்கலாம்.  நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்பது முக்கியம்.  தினந்தினம் தண்ணீரை மாற்ற வேண்டும். இல்லையேல் சிட்டுக்குருவிக்கு நோய் வந்து விடுமாம்.

3. அரிசி போன்ற தானியங்கள் வறட்டுத் தன்மை கொண்டதால் 
   தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு குருவியும்
   ஒரு நாளைக்கு இரு முறை நீர் அருந்துமாம்.

4.நம் கான்கிரீட் வீடுகளில் குருவிக்குக் கூடு கட்ட வசதியில்லாததால், 
மரத்தால் செய்யப்பட்ட கூடுகளை வாங்கி வீட்டுப் பால்கனிகளில் 
வைக்கலாம்.
5.           தோட்டமிருப்பவர்கள் புதர்ச் செடிகளை வளர்க்கலாம்.


சுறுசுறுப்புக்குப் பெயர் போன இந்த இனத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று மிகவும் நேசத்துடனும் பாசத்துடனும் இணை பிரியாமல் இருக்கும் என்பது வியப்பான செய்தி.

சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

என்று நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது நம் கடமை.

எனவே அன்பர்களே, நண்பர்களே இச்சிட்டுக்குருவியினத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற நம்மால் முடிந்ததைச் செய்வோம்!



Monday 12 March 2012

பெண் எனும் இயந்திரம்

கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. 

தன் மேலிருந்த குழந்தையின் கையை மெதுவாக எடுத்துத் தலையணை மீது வைத்து விட்டு மாலினி எழுந்த போது குழந்தை சிணுங்கியது. அய்யய்யோ! குழந்தை விழித்து விட்டால், கிளம்ப முடியாமல் போய் விடுமே!

பக்கத்தில் அமர்ந்தபடி குழந்தை விழித்துக் கொள்கிறாளா எனச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை நன்றாகத் தூங்கியதை உறுதி செய்து கொண்டவள், அவசர அவசரமாகப் புடைவையை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

கதவைத் தாழிட்டுக் கொள்ள கணவனைத் தேடிய போது, அவன் பக்கத்து அறையில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். 

"ஏங்க. எந்திரிச்சு கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டுப் படுத்துக்கோங்க" 

"நிம்மதியா இந்த வீட்டுல கொஞ்ச நேரம் தூங்க முடியாது," என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்து வந்தான் அவன்.

'தூக்கத்துல எந்திரிச்சி ஒரு நிமிஷம் கதவைச் சாத்திக்கவே உங்களுக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கே.  தெனமும் ராத்திரி முழுக்க கண் முழிக்கிற எனக்கு எவ்ளோ கஷ்டமாயிருக்கும்னு ஒரு நாளாவது யோசிச்சுப் பார்த்திருக்
கீங்களா?"

"அது ஒன்னோட தலையெழுத்து.  அதுக்கு நான் என்னா செய்ய முடியும்"

"ராத்திரி கண்ணு முழிச்சி சம்பாதிக்கணும்னு எனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்லை.  நீங்க தான் நல்லாப் பணம் கிடைக்குதுன்னு இந்த வேலையில சேர்த்து விட்டிருக்கீங்க.  இன்னிக்கே இந்த வேலையைத் தலை
முழுகிட்டு வந்துடறேன்.  நாளையிலேர்ந்து நான் போறேனான்னு பாருங்க"

போகாட்டி வூட்டுல உட்கார்ந்துட்டு மூணு வேளை எப்படி மூக்குப் புடிக்கத் திங்கிறது?  ஒனக்கு வசதியா வூடு வாங்கணும்.   ஸ்கூட்டர் வாங்கணும்.  எல்லாக் கடனுக்கும் புடிச்சது போக நான் வாங்கறது குழந்தைக்குப்
பால் பவுடர் வாங்கக் கூடப் போறாது.  எக்கேடாவது கெட்டுப் போ"  திட்டிக் கொண்டே வந்து படாரென்று கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டான் அவன்.

ஒரு நாளாவது, 'பாவம் ராத்திரி முழுக்க கண் முழிச்சி இவ்ளோ கஷ்டப்படுறியே'ன்னு அவன் வாயிலிருந்து ஆறுதலாக ஒரு வார்த்தை வராதா என அவள் மனம் ஏங்கும்.  ஆறுதலாகப் பேச வேண்டாம்; .
திட்டாமலாவது இருக்கக் கூடாதா?

பகலில் படுத்துத் தூங்கலாம் என்றால் குழந்தையைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும்.  போதாக் குறைக்கு மளிகை, காய்கறி எல்லாம் இவள் தான் வாங்க வேண்டும்.  கடன் போக தான் வாங்கும் சம்பளத்தை அவள் கையில் கொடுப்பதோடு அவன் கடமை முடிந்து விடும்.

ஏதாவது அவள் சொன்னால், என் கூட  வேலை பார்க்கிறவனுங்க செய்யற மாதிரி குடி, கூத்துன்னு செல்வழிக்காம, சம்பளத்தை அப்படியே உங்கிட்ட கொண்டாந்து கொடுக்கிறேன்னு சந்தோஷப்படு என்று சொல்லி அவள் வாயை அடைத்து விடுவான்.

பக்கத்தில் வந்து நின்ற வேனைப் பார்த்தவுடன் அவள் சிந்தனை தடைபட்டது. டிரைவரைப் பார்த்தவுடன் மனம் திக்கென்றது.

"பழைய டிரைவர் எங்கே?" என்றாள் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல்.

"அவர் குழந்தைக்குத் திடீர்னு இன்னிக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சாம்.  ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கார். அதனால இன்னிக்கு மட்டும் என்னை ஓட்டச் சொன்னாரு"

ஏறலாமா, வேண்டாமா எனக் குழப்பம். திரும்பி வீட்டுக்கே போய்விடுவோமா? என்று ஒரு கணம் யோசித்தாள்.

கணவன் இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்.  கதவைத் தட்டினாலும் திறப்பது சந்தேகமே என்ற எண்ணத்தில் துணிந்து வண்டியில் ஏறிவிட்டாள்.  சில மாதங்களுக்கு முன் செய்தித் தாளில் படித்த ஒரு கொலைச் செய்தி நினைவுக்கு வந்து அவளைப் பயமுறுத்தியது.

வேன் எப்போதும் போகிற வழியில் தான் போகிறதா என  சன்னல் வழியே இருட்டில் உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தாள்.  வழி ஏதும் மாறிப் போனால் கதவைத் திறந்து கொண்டு குதித்து விடுவது என்று முடிவு செய்து கொண்டு கதவுக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்தாள்.  இடையிடையே டிரைவர் திரும்பி அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கவே அவளது பயம் அதிகரித்தது.

ஓடுகிற வேனிலிருந்து குதித்தால் கண்டிப்பாக உயிர் போய்விடும். மானம் போவதற்கு முன் உயிர் போய்விட வேண்டும்.  ஒரு வேளை, கை, கால் முறிந்து உயிர் பிழைத்துக் கொண்டால்?

கூடாது, கூடாது.  கை,கால் நன்றாயிருக்கும் போதே இந்த மனுசரிடம் இந்தப் பாடு.  படுக்கையில் வேறு விழுந்து விட்டால், அவ்வளவு தான்.  வார்த்தை யாலேயே கொன்று விடுவார்.  கடவுளே! கண்டிப்பாக உயிர் போய் விட வேண்டும்.

என் சாவைப் பற்றித் தெரிந்ததும் இவர் அழுவாரா?  பயந்த சுபாவம் கொண்டவளை இப்படி வலுக்கட்டாயமாக நட்ட நடு ராத்திரியில் வேலைக்கு அனுப்பி சாகடிச்சிட்டோங்கிற குற்ற உணர்வு இவரைக் கொல்லும். நன்றாகக்
கொல்லட்டும்.

வேனிலிருந்து தவறி விழுந்து இறந்ததாகத் தான் எல்லோரும் நினைத்துக் கொள்வார்கள். தற்கொலை என்று யாருக்கும் சந்தேகம் வராது.
நான் போன பிறகு என் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள்?  இவர் வரதட்சிணை, சீர் செனத்தியோடு வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டுப் போய் விடுவார்.  என் குழந்தை தான் தாயில்லாம அனாதையாத்
தெருவில திரியும்.  தாயற்றுப் போனா சீரற்றுப் போகும்னு தெரியாமலா சொன்னாங்க பெரியவங்க?

திடீரென்று வண்டி நிற்கவே, உஷாராகி தெருவைப் பார்த்தாள்.  அவளுடன் வேலை பார்க்கும் பெண்களிருவர் வண்டியில் ஏறவே, அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

"எங்கள மாதிரி ஜீன்ஸ் பாண்ட் தான் போட மாட்டே.  தலை முடியைக் கூடவா ஒழுங்கா சீவிட்டு வரத் தெரியாது? அப்படியே அள்ளி முடிஞ்சுட்டு வந்திருக்கே"  கிண்டலாகச் சிரித்தபடியே கேட்டாள் ஒருத்தி.

குழந்தையைத் தூங்க வைத்து விட்டு தலை முடியை வாரிக் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பி வந்தது அப்போது தான் அவள் நினைவுக்கு வந்தது.  கண்ணாடி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

கண்ணாடி பார்க்க நேரம் எங்கேயிருந்தது?அவராவது பார்த்துச் சொல்லியிருக்கலாம்.  'இவ எப்பக் கிளம்புவா?  கதவைச் சாத்திட்டு
நாம எப்பத் தூங்கப் போகலாம்?' என்றிருப்பவருக்கு என் தலைமுடியைப் பற்றி என்ன கவலை என்று யோசித்தவள், தன் கைப்பையிலிருந்து சீப்பை எடுத்து அவசர அவசரமாக முடியைச் சீர் படுத்திக் கொண்டாள்.

"குழந்தைக்கு உடம்பு சரியில்லே.  அவளைத் தூங்க வைச்சிட்டுக் கிளம்புறதுக்கு நேரமாயிடுச்சி.  அதனால வர்ற வழியிலே முடியை வாரிக்கலாம்னு வந்துட்டேன்" என்று சமாளித்தாள்.

டிரைவர் திரும்பித் திரும்பித் தன்னை ஒரு மாதிரியாகப் பார்த்தது இதற்குத் தான் என்று மாலினிக்கு இப்போது புரிந்தது. இது தெரியாமல் டிரைவரைச் சந்தேகப்பட்டு..... கண நேரத்தில் என்னென்னவோ யோசித்து...
மனம் இன்னும் அந்தப் பதட்டத்திலிருந்து முழுமையாக விடுபட வில்லை.

அப்பெண்களிருவரும் உற்சாகமாக வழி நெடுகப் பேசிக் கொண்டே வந்தனர்.  அவளால் அவர்கள் உரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லை.

'இவர்களால் மட்டும் எப்படி பதட்டமே இல்லாமல், இப்படி சிரிப்பும் கும்மாளமுமாக இருக்க முடிகிறது? இவர்களுக்கும் என்னை மாதிரி கல்யாணம் ஆகி குழந்தை, குட்டி வந்த பிறகு இதே மாதிரி உற்சாகமாக
இருக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.'   அவர்களைப் பார்த்து அவளால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.

இரவு முழுதும் அவள் பணிபுரியும் அந்த கால் செண்டருக்கு வெளிநாடு களிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதே அவளது வேலை. 

விடிய விடிய வேலை செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய போது அவளது உடம்பும் மனதும் மிகவும் சோர்ந்துவிட்டிருந்தது.

நாற்காலியில் தலையைச் சாய்த்துக் கொண்டு கண்களை மூடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். குழந்தை இன்னும் கண் விழிக்கவில்லை.  கணவன் எழுந்து பல் தேய்த்து விட்டுக் குளிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

முதல் நாளிரவு தான் பட்ட மனக் கலக்கத்தை  யாரிடமாவது சொன்னால் தேவலை என்றிருந்தது அவளுக்கு.

"என்னங்க.  நேத்து ராத்திரி என்னாச்சு தெரியுமா?  வழக்கமா வர்ற டிரைவர் வரலை.  புதுசா ஒருத்தன் வந்தான்.  எனக்குப் பெங்களூர்ல கால் செண்டர் பொண்ணு கொலை நடந்துச்சே அது ஞாபகத்துக்கு வந்துடுச்சி.  நான் ரொம்பப் பயந்து போயி......."

"அந்தக் கதையெல்லாம் அப்புறமாப் பேசலாம்.   குழந்தை முழிக்கிறதுக் குள்ளே எந்திரிச்சிப் போயி டிபன் செய்ற வேலையைப் பாரு." என்றான் அவன்.   
         

Thursday 8 March 2012

புதிய வேர்கள்


இன்று காலை எழுந்ததிலிருந்தே என் மனசு சரியில்லை.  அப்பாவுக்கு உடல்நலமின்றிப் போவதாகக் கனவு கண்டு அதிகாலையில் விழித்துக் கொண்டேன்.  அதற்குப் பிறகு கனவு தானே என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு தூங்குவதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.  சரியான தூக்கமின்றி தலை பாரமாயிருந்தது.

திருமணமாகி ஆஸ்திரேலியாவுக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகின்றது.

பக்கத்து வீடுகளில் யார் யார் வசிக்கிறார்கள் என்றே இன்றுவரை தெரியவில்லை.  கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள்.  காலையில் கிளம்புபவர்கள் மாலையில் பறவைகள் கூட்டுக்கு வந்தடைவதைப் போல குழந்தைகளுடன் வீடு திரும்பு கிறார்கள்.  காருக்கான கேரேஜை திறந்து கொண்டு சென்று அதன் வழியாக இருக்கும் நுழைவாயில் வழியாகவே வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்கள்.  எப்போதாவது வெள்ளைக்காரர்கள் சிலர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் போது பார்த்தால் உண்டு.  உயிரோட்டம் இல்லாத இத்தெருக்கள் நிசப்தமாயும் வெறிச்சோடியும் இருக்கின்றன என் மனசைப் போலவே. 

“ஏன் முகம் ஒரு மாதிரியாயிருக்கு? என்றார் கணவர்.  என் முகவாட்டத்தைக் கவனித்து விட்டார் போலிருக்கிறது.

அப்பாவுக்கு உடம்பு சொகமில்லாதது மாதிரி ஒரு கனவு கண்டு பாதியிலே முழிச்சிக்கிட்டேன்.  அதான் என்னவோ ஏதோன்னு பயமாயிருக்கு.

அதெல்லாம் ஒன்னுமிருக்காது.  நீ எப்பப்பார்த்தாலும் அப்பா, அம்மா, தம்பின்னு நெனைச்சிக்கிட்டிருக்கேல்ல, அதான் கனவா வருது.  வேணுமின்னா போன் பண்ணிப் பேசேன்.

”........”

என்ன பதிலையே காணோம்? 

இல்ல.  வந்து.....

என்ன? இல்ல.. வந்து.

நான் ஒரு தடவை ஊருக்குப் போயி அப்பா அம்மாவைப் பார்த்துட்டு......?.

ஒனக்கு எத்தினி தட்வை சொல்றது?  ஒரு தடவை சொன்னாப் புரியாது?  நீ என்ன இன்னும் சின்னப்புள்ளையா? எப்பப் பார்த்தாலும் ஊர்..ஊர்ன்னுட்டு......ஒங்கத்தாத்தா தான் விமான சர்வீஸ் நடத்துறாரு.  இந்தியாவிலேர்ந்து வந்து இப்பத்தான் ஒரு வருஷம் ஆவுது.  அதுக்குள்ள ஊருக்குப் போகணுமாம்.  ஒண்ணு செய்.  ஒன்னை மட்டும் விமானத்தில ஏத்தி விடறேன்.  ஒங்க வூட்டுக்குப் போய் ஒங்கப்பா, அம்மா, தம்பி கூடவே எவ்வளவு நாள் வேணுமின்னாலும் இரு.  இஙக வரவே வாணாம்.   

கோபமாகக் கத்திவிட்டு வெளியே கிளம்பியவரிடம்,.

என்னங்க! டிபன் சாப்பிட்டுட்டுப் போங்க, என்றேன்.

ஒண்னும் வேணாம்.  எல்லாத்தையும் நீயே சாப்பிடு. சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்று விட்டார் அவர்.. 

இப்போதெல்லாம் எங்களிருவருக்கும் சண்டை வர முக்கிய காரணமே இது தான்.  அடுத்த வருடம் ஊருக்குப் போகலாம் என்று அவர் சொல்லி யிருக்கிறார்.  ஆனால் நான் இந்த வருடமே போக வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தால் போதும், அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது.

வெளிநாட்டில் முதன் முதலில் கணவருடன் வந்து இறங்கிய போது நகரின் அழகும் சாலைகளின் தூய்மையும் கட்டிடங்களின் பிரும் மாண்டமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் என்னைப் பிரமிக்க வைத்ததென்னவோ உண்மைதான். 

தேனிலவைக் கொண்டாடும் விதமாக மெல்போர்னைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்ததோடு,   சிட்னிக்கும் போய் அங்கும் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தாயிற்று.   ஒரு மாதம் போனது தெரியவில்லை.  கணவரின் அலுவலக நண்பர்கள் வீட்டு விஜயம், பார்ட்டி அது இது என்று இரண்டொரு மாதங்கள் ஓடிப் போயின.  ஆறாம் மாதத்திலிருந்து தனிமை என்னை வாட்டத் தொடங்கியது.  அம்மா, அப்பாவை எப்போது பார்ப்போம் என்றிருந்தது.

கணிணியில் வெப் காமிரா மூலம் அவர்களைப் பார்த்த போது ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.  அவர்கள் மடியில் தலை சாய்த்துத் தூங்க வேண்டும் போலிருந்தது.  இத்தனைக்கும் கணவர் என் மீது அன்பாய்த் தான் இருக்கிறார்.  இருந்தாலும் நினைவுகள் ஏன் பிறந்த வீட்டையே சுற்றிச் சுற்றி வருகின்றன?   


அவர் கிளம்பிச் சென்றவுடன் அம்மாவுடன் தொலைபேசியில் பேசினேன். அப்பாவைப் பற்றி விசாரித்தேன். அப்பா நலமாய்த் தான் இருக்கிறார் என்று அம்மா சொல்லக் கேட்டு ஆறுதல்.  ஆனால் அம்மா சொன்ன இன்னொரு தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது. எங்கள் வீட்டு மாமரம் திடீரென்று பட்டுப் போய் விட்டதாம்.  என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று அம்மா சொன்னார்.
வேளாண் துறை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரை அழைத்து வந்து காட்டினார்களாம்.  வேரில் கரையான் வந்து அரித்திருக்கலாம் என்று அவர் சொன்னாராம். 

தொடர்ந்து பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. . 
சீ பைத்தியம்.  ஒரு மரம் செத்துப் போனதுக்கு யாராவது அழுவாங்களா? மனசளவில இன்னும் குழந்தையாவே இருக்கிறியே?  ஒரு மரம் போனா இன்னொன்னு வைச்சிக்கலாம்.  இதுக்கா இவ்ளோ கவலைப்படுற?  நம்மூர்ல சீசன்ல ஒரு கிலோ மாம்பழம் இருபது ரூபாய்க்குச் சிரிப்பாச் சிரிக்குது. இன்னொரு மரம் வைக்க முடியலேன்னாலும் காசைக் கொடுத்து மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டுக்கலாம். அழாதே என்று சமாதானப்படுத்தினார் அம்மா.  


தொலைபேசியை வைத்து விட்டுப் படுக்கையில் வந்து விழுந்த போது மாமரத்தின் இந்தத் திடீர் முடிவு என்னைச் சோகத்தில் ஆழ்த்தியது.  என் பிரிவு தந்த சோகத்தினால் மரம் செத்து விட்டதோ?  தம்பியிடம்  ஒரு முறை அந்த மாமரத்துக்கும் எனக்குமுள்ள பாசப் பிணைப்பைப் பற்றிச் சிலாகித்துச் சொன்ன போது, அவன் லூசாக்கா நீ? என்று கேட்டுக் கிண்டல் பண்ணத் துவங்கிவிட்டான். அதிலிருந்து அதைப் பற்றி நான் வேறு யாரிடமும் மூச்சு விடவில்லை.     

தம்பி முரடன். அவனுக்குப் பாசத்தை வெளிப்படுத்த தெரியாது..  நான் அவனிடம் பிரியமாக இருந்தாலும் வலிய என்னைச் சண்டைக்கு இழுத்து என்னைக் கோபப்பட வைப்பதில் அவனுக்கு அலாதிப் பிரியம்..

நானும் தம்பியும் சண்டை போடும் போதெல்லாம், இப்படி கீரியும் பாம்புமாக எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக்கிறீங்களே, எப்பத் தான் ஒங்க சண்டை நிக்குமோ என அம்மா அடிக்கடி புலம்புவார்.

ஏண்டா இன்னுங் கொஞ்ச நாள்ல கல்யாணமாகி அக்கா நம்மளை யெல்லாம் விட்டுட்டு ஆஸ்திரேலியா போயிடுவாடா.  அதுக்கப்புறம் அவ புருஷன் அனுமதிச்சா தான் நம்ம வீட்டுக்கே அவ வர முடியும்.  அதுவும் வெளி நாட்டிலேர்ந்து ஒரு மாச விடுமுறையில வரும் போது, மாமியார், நாத்தனார் வீட்டுக்கெல்லாம் போயிட்டு ஒரு வாரமோ, பத்து நாளோ தான் நம்ம வீட்டுக்கு வருவா.  அக்கா நம்ம வீட்டுக்கு வர மாட்டாளான்னு அப்ப நீ ஏங்கித் தவிக்கப் போறே.  அதுக்கப்புறம் உன்கிட்ட சண்டை போடறதுக்குக் கூட யாரும் கிடையாது, என்று அம்மா சொல்லும்போது,

நான் ஒன்னும் ஏங்க மாட்டேன். போய்த் தொலையட்டும்.  அப்பத் தான் நான் நிம்மதியா இருப்பேன்.என்று சொன்னவன்,

அக்கா மறுபடி எப்ப நம்ம வீட்டுக்கு வரும்? என்று அம்மாவிடம் இப்போது அடிக்கடிக் கேட்கிறானாம்.  நீயில்லாமல் அவனுக்குப் போரடிக்குது, என்றார் அம்மா பேசும் போது.

அவனிடம் சண்டை போட்ட அந்தப் பழைய ஞாபகங்கள் வந்து மனதைச் சங்கடப்படுத்தின.

அம்மா, பாருங்கம்மா. ரிமோட்டை வைச்சிக்கிட்டு என்கிட்ட கொடுக்கவே மாட்டேங்கிறான்.  கொடுக்கச் சொல்லுங்கம்மா

ரொம்ப நேரமா நீ தானே பார்த்துக்கிட்டிருக்கே.  அவக்கிட்ட கொஞ்ச நேரம் கொடேன்டா. ஒங்க ரெண்டு பேரு சண்டை என்னிக்குத் தான் தீரப்போகுதோ தெரியலையே. 

முடியாதும்மா.  நான் ஒரு முக்கியமான கார்ட்டூன் பார்த்துக் கிட்டிருக்கேன்.  அது முடிஞ்சப்புறம் தான் கொடுப்பேன்.

முடியாது.  இப்பவே வேணும்.  அம்மா, கொடுக்க மாட்டேங்கிறான்மா.

ஏண்டி இப்படி நாலு தெருவுக்குக் கேட்கிற மாதிரி கத்துறே.  இவ்ளோ பெரியவளா வளர்ந்துட்டியே ஒழிய, இன்னும் தம்பி கூட சரிக்குச் சரி சமானமா நின்னு சண்டை போடறதுக்கு வெட்கமாயில்லே ஒனக்கு?

நீங்க எப்பப் பார்த்தாலும் அவனுக்குத் தான் சப்போர்ட் பண்ணிப் பேசுவீங்க.  எவ்ளோ நேரமா அவனே பார்த்துக்கிட்டிருக்கான்.  எங்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க.

ஏண்டா சனியனே.  அதைக் கொடுத்துத் தொலையேன்டா.  ஒங்க ரெண்டு பேரோட மல்லுக்கட்டி, மல்லுக்கட்டியே எனக்கு பிரஷர் ஏறித் தொலைஞ்சிடுது.  ஒவ்வொரு  வீட்டுல கூடப் பொறந்ததுங்க, ஒன்னுக் கொன்னு எவ்ளோ அன்பா பாசமாயிருக்குதுங்க.  எனக்குன்னு வந்து பொறந்திருக்கீங்களே.  ரெண்டு பேருமே பார்க்க வேணாம்.  அந்த ரிமோட்டைக் கொண்டா இப்படி.

தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்திவிட்டு ரிமோட்டைப் பிடுங்கிக் கொண்டு அடுப்பங்கரையில் கொண்டு தம்முடனே வைத்துக் கொள்வார் அம்மா. இது தினந் தினம் எங்கள் வீட்டில் நிகழும் பிரச்சினை.

.இப்போது நினைத்தால் ஒரு பக்கம் சிரிப்பாய் வருகிறது; மறுபக்கம் தம்பியிடம் ஏன் அப்படிச் சண்டை போட்டோம் என்று வருத்தமாகவும் இருக்கிறது.  இப்போது நாள் முழுக்க தொலைக்காட்சி பார்க்க வேண்டுமென்றாலும் பார்க்கலாம்.  காலையில் கணவருக்கு டிபன் செய்து அனுப்பிய பிறகு நாள் முழுக்க எனக்கு வேறு வேலையில்லை.  அவர் வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிடும்

வூட்டு வேலையெல்லாம் அப்படி அப்படியே போட்டது போட்டாப்ல கெடக்குது.   பொண்ணாப் பொறந்தது ஒரு வேலையும் செய்யாம, நாள் முழுக்க ஒக்கார்ந்துக்கிட்டு டீ.வி.யே கதின்னு கெடக்குது.  பொண்ணா வளர்த்து வைச்சிருக்கீங்கன்னு மாமியார்க்காரி என் முகத்தில காரித்தான் துப்பப் போறா, என்று என்னைத் திட்ட அம்மா இங்கில்லை.. 

எந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது என்பதில் என்னுடன் போட்டி போட தம்பியுமில்லை.  ஆனால் இப்போதோ தொலைக்காட்சி நிகழ்ச்சி எதையும் பார்க்க எனக்குத் துளிக்கூட விருப்பமில்லை. இத்தனைக்கும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இங்கு நன்றாகத் தெரிகின்றன.  என்னிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கத் தம்பியில்லை என்பதாலேயே தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு ஆர்வமின்றிப் போய் விட்டதோ?


எனக்குக் கரப்பான் பூச்சி என்றால் பயம் அதிகம்.  பயம் என்று சொல்வதை விட அருவருப்பு என்று சொன்னால் சரியாக இருக்கும்.  அதுவும் அது பறக்க ஆரம்பித்தால் நேரே என்னை நோக்கியே வரும்.  போன பிறவியில் நீயும் அதுவும் இணை பிரியாத் 
தோழிகளாயிருந்திருக்கிறீர்கள், என்று தம்பி கிண்டல் செய்வான்.  எனவே பூச்சி பறக்க ஆரம்பித்தவுடன் நான் அலறியடித்துக் கொண்டு இங்குமங்கும் ஓடுவதைக் கண்டால் அவனுக்கு மகிழ்ச்சி.  என்னைக் கோபப்படுத்த வேண்டும் என்றே விழுந்து விழுந்து சிரிப்பான். அப்பூச்சியை அடிக்கச் சொல்லி அவனிடம் நான் கெஞ்ச வேண்டும்.  கொஞ்ச நேரம் என்னை அழவிட்டு வேடிக்கை பார்த்த பிறகே, அடித்துச் சாகடிப்பான்.

ஒரு தடவை நான் கட்டிலில் படுத்திருந்த போது, அக்கா, உன் மேலே ஒரு கரப்பான் பூச்சி, என்று அவன் சொல்ல, நான் பயந்து போய் கட்டிலிருந்து வேகமாக எழ முயன்று, போர்வை தடுக்கிக் கீழே விழ,  முட்டியில் பலத்த காயம்.

எதற்கும் அடிக்காத அப்பாவே அந்த முறை அவன் முதுகில் ரெண்டு சாத்து சாத்தியதில் என் மேல் கோபம் கொண்டு ஒரு வாரம் பேசாமலிருந்தான். 

கதைப் புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர்.  அதிலும் மர்ம நாவல்களைப் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.  தம்பிக்குக் கதைகள் படிப்பதில் ஆர்வமில்லை.  ஆனால் என்னிடம் வம்பளப்பதற்காகவே நான் பாதி படித்திருக்கும் கதையின் கடைசி சில பக்கங்களைப் படித்து விட்டு, முடிவைச் சொல்லிடுவேன், சொல்லிடுவேன் என்று பயமுறுத்துவான்.  முடிவு தெரிந்து விட்டால் கதையின் மீதத்தைப் படிக்கும் ஆர்வம் எனக்குக் குறைந்து போய் விடும் என்பதற்காக அவனிடம் சண்டை போடுவேன். 

ஒரு தடவை நான் மிகவும் சுவாரசியமான நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் போது, அந்த ஹீரோயின் கடைசியில செத்துடுவா, என்று அவன் முடிவைச் சொல்ல, கோபத்தில்  நான் அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்து விட்டு ஒரு நாள் முழுக்க அவனை ஆத்திரம் தீருமட்டும் திட்டிக் கொண்டிருந்தேன்.

அதே போல் சினிமா என்றாலும் தன் நண்பர்களுடன் படம் வெளியான ஒரு சில தினங்களிலேயே போய்ப் பார்த்து விட்டு வந்து விடுவான்.  படத்தின் முடிவைச் சொல்லட்டுமா என்று கேட்டு என்னை வெறுப் பேற்றிக் கொண்டிருப்பான். 

எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் இஞ்சீனியர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் ஆன பிறகு கூட, எங்கள் சண்டை ஓயவில்லை.  ஆனால் முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் தம்பியின் சார்பாகவே  பேசும் அம்மா, அதற்குப் பிறகு என் சார்பாக பேசத் துவங்கியது தம்பிக்குப் பொறுக்கவில்லை.  என் மீது அவனுக்குப் பொறாமை இன்னும் அதிகமானது.


உள்ளே ஓர் அழகிய கடிகாரம் வைத்து இரு பக்கமும் திறக்கும் படியான ஒரு சாவிக் கொத்தை அப்பா அலுவலகத்திலிருந்து ஒரு நாள் கொண்டு வந்தார்.  அதை நண்பரொருவர் அப்பாவிற்குப் பரிசாகக் கொடுத்தாராம்.  மூடிய பின் ஒரு சிவப்பு வண்டு போல் அழகாக இருந்தது அக்கடிகாரம்.  அப்பா அதை என்னிடம் தான் கொண்டு வந்து கொடுத்தார்.  ஆனால் அதை நான் சரியாகப் பார்க்கக் கூட இல்லை.  அதற்குள் தம்பி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான். 

அப்பா எனக்குத் தானே கொடுத்தார்.  அதைக் கொடு, என்று தினமும் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன்.  அவன் கொடுக்க முடியாது, என்று சொல்லிவிட்டான்.  அவன் பள்ளி சென்ற சமயங்களில் அவனது மேசை, அலமாரி உட்பட எல்லாவிடங்களிலும் தேடிப்பார்த்து அலுத்துவிட்டது எனக்கு. கடைசிவரை  அது கிடைக்கவேயில்லை.  எங்கோ பத்திரமாக ஒளித்து வைத்து விட்டான்.

திருமணத்துக்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நெருங்கிய உறவுகள் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர். திருமண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அப்பாவுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்த தம்பியைப் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
 
நேற்று வரை சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட என்னிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தவன், இன்று பெரிய மனுஷன் போல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படுகிறானே என எனக்கு ஆச்சரியம்.

திருமணத்தின் போது வ்ந்திருந்த சொந்தங்களுக்குத் தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததில் ஆகட்டும், மாப்பிள்ளை வீட்டார்க்குக் குறையேதும் ஏற்படாவண்ணம் கவ்னித்துக் கொண்டதில் ஆகட்டும், பையன் என்றால் இப்படியல்லவோ இருக்கணும், என்ற பாராட்டு அனைவரிடமும் கிடைக்கும் படி நடந்து கொண்டான் தம்பி.

கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திலேயே நானும் என் கணவரும் ஆஸ்திரேலியா கிளம்புவதாக ஏற்பாடு.  அம்மா வீட்டிலிருந்து  மாமியார் வீட்டுக்குக் கிளம்பும் போது, எல்லாப் பெண்களையும் போல் எனக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

பிறந்தது முதல் சுற்றிச் சுற்றி வந்த இந்த வீட்டை விட்டு முதல் தடவையாகப் பிரிகிறேன்.  இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லுடனும் எனக்கு உறவு.  வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் அனைத்தும் தினந்தினம் தண்ணீர் ஊற்றி நான் பார்த்துப் பார்த்து வளர்த்தவை. 

திருமணம் முடிந்தவுடன் நான் வேற்று மனுஷியாகி விட்டது போல் ஓர் உணர்வு.  எனக்கும் இந்த வீட்டிற்கும் இருந்த பந்தம் அறுபட்டுவிட்டது.  உரிமை பறிபோய்விட்டது.  இந்த வீட்டைச் சுற்றி, உறவுகளைச் சுற்றியிருந்த என் ஆணிவேர் அறுபட்டு விட்டது. .  அறுபட்டு விட்டது என்று சொல்வதை விட பலவந்தமாகப் பிடுங்கப்பட்டு விட்டது என்று சொல்வது பொருத்தமாயிருக்கும்.  இனி வேர் அறுபட்ட இந்தப் பெரிய மரம் புகுந்த வீட்டுக்குப் போய் புதிதாய் வேர் விட்டு  உயிர் பிழைக்க வேண்டும், என்று எனக்குள் ஏதேதோ எண்ணங்கள்.

கிளம்புவதற்கு முன் என் மாமரத்திடம் போய் பிரியாவிடை பெற்றுக் கொண்டேன்.  அது வெறும் மரமல்ல. உயிருள்ள என் தாத்தா.  எனக்குத் தாத்தா என்றால் கொள்ளைப் பிரியம்.  சாவதற்கு முன் அவர் நட்டது அது.  இன்னும் அந்த நாள் பசுமையாக என் நினைவில் இருக்கிறது.

சாவதற்குப் பத்து நாள் முன்னாடி தான் தாத்தா அந்த மாங்கன்றை நட்டார். 

“உடம்பு முடியாததோட இதெல்லாம் ஏன் தாத்தா செய்றீங்க?  இது வளர்ந்து பெரிய மரமாகி, பழம் பழுத்து சாப்பிடற வரைக்கும் நீங்க இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கா தாத்தா ஒங்களுக்கு?

நானா? இது காய்க்கிற வரைக்குமா?  சான்ஸே இல்லடா செல்லம்

அப்புறம் ஏன் தாத்தா இதுக்குப் போயி இவ்வளவு கஷ்டப்படுறீங்க?

நான் சாப்பிடாட்டி என்னம்மா?  நீ சாப்பிட்டா நான் சாப்பிட்டது மாதிரி.  எங்கத் தாத்தா வைச்சிட்டுப் போன மரத்திலேர்ந்து நான் பழம் பறிச்சேன்.  இந்தத் தாத்தா வைச்சிட்டுப் போன மரத்திலேர்ந்து நீயும் தம்பியும் சாப்பிடுங்க. சரியா? உலகத்துல பொறந்த ஒவ்வொருத்தரும் தன்னோட சந்ததிக்காக இந்த மாதிரி மரம் ஒண்ணாவது நட்டு வைச்சிட்டுப் போகணும்.  புரிஞ்சுதா?

நான் தலையாட்டி வைத்தேன். 

தாத்தா இறந்த பிறகு தினமும் நீர் விட்டுக் கண்ணுங் கருத்துமாக அச்செடியைக் கவனித்துக் கொண்டேன்.  மூன்று ஆண்டுகள் கழித்து அதன் பழத்தைச் சாப்பிட்டவர்கள், இந்த மாங்கன்னைக் கிழவர் எங்கேர்ந்து தான் கொண்டாந்து வைச்சாரோ தெரியலியே, இவ்ளோ ருசியா இருக்குதே, என்று புகழ்ந்தார்கள். 

என் மகிழ்ச்சி, துக்கம் வெற்றி தோல்வி எல்லாவற்றையுமே நான் இந்த தாத்தா மரத்துடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். நான் மிகவும் மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லும் போது தன் கிளைகளை வேக வேகமாக அசைத்து மரம் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது போல் எனக்குத் தோன்றும்.  அதுவே துக்கச் செய்தியைச் சொன்னால் மரம் ஆடாமல் அசையாமல் கிளைகளைத் தொங்க விட்டுக் கொண்டு சோர்வாக நிற்கும்.

அப்படித்தான் அன்றும் மரத்திடம் பிரியா விடை பெற்றுக் கொண்டேன்.  தாத்தா, நான் ஆஸ்திரேலியா போறேன். போயிட்டு வரட்டுமா?  அடுத்த வருஷம் நீ காய்க்கும் போது பழம் சாப்பிட கண்டிப்பா நான் வருவேன்.

மரம் ஆடாமல் அசையாமல் நின்றது.  நீ இப்படி இருந்தா நான் போகமாட்டேன்.  போயிட்டு வான்னு சொல்லு. சொன்னாத்தான் போவேன்.

திடீரென்று வீசிய காற்றில் மரக்கிளைகள் இப்படியும் அப்படியுமாக ஆடின.  மரம் எனக்குக் கையசைத்து டாட்டா காட்டியது போல் உணரவே உற்சாகமானேன்.  ம்ரத்தைக் கட்டியணைத்துப் பிரியா விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். 

அம்மா போயிட்டு வரேன்மா.  வேலை, வேலைன்னு செஞ்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க.  உடம்பைக் கவனிச்சிக்குங்க.  அப்பாவையும் நல்லபடியா பார்த்துக்கோங்க.....

அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.  அம்மா முந்தானையால் தம் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தார்.  அப்பாவோ தாம் அழுவது எனக்குத் தெரியக் கூடாது என்பதற்காக வேறு பக்கம் திரும்பிக் கொண்டு என் பார்வையைத் தவிர்த்தார்.

பொண்ணுக்குக் கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்திட்டோம்.  இன்னும் கொழந்தையாவே தான் இருக்கா. அவ ஏதாவது தப்பு செஞ்சாலும் எங்களுக்காக நீங்க அவளை மன்னிச்சு நல்லவிதமாப் பார்த்துக்கணும்”  அப்பா தம் மாப்பிள்ளையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு காரில் ஏறப்போகும் சமயம் என்னையும் அறியாமல் என் கண்கள் தம்பியைத் தேடின.

தம்பி திண்ணை ஓரத்தில் தூணைப் பிடித்த படி நின்று கொண்டிருந்தான்.  வழக்கமாக அவன் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பைக் காணோம்.  முகம் வீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலிருக்கிறது.

வரேன்டா தம்பி, நல்லாப் படிக்கணும் அவன் அருகில் சென்று அவன் கன்னத்தைச் செல்லமாக ஒரு தட்டு தட்டிச்  சொல்லிவிட்டுக் காரினுள் ஏறினேன்.  காரைச் சுற்றி எல்லாரும் நின்றிருந்தார்கள்.  தம்பியைக் காணோம்..  திடீரென்று எங்கிருந்தோ வந்த அவன், நான் அமர்ந்திருந்த சன்னல் வழியாக  உள்ளுக்குள் கைவிட்டு என் கைமீது பதித்து விட்டு, போயிட்டு வாக்கா என்று சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்க்காமல் சட்டென்று திரும்பி விடு விடென்று வீட்டினுள் போய்விட்டான்.

கார் கிளம்பிச் சிறிது தூரம் சென்ற பிறகு, என் கையில் ஏதோ உறுத்துவது போலிருக்கவே, எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். அது எனக்கும் தம்பிக்கும் பலமுறை சண்டை வரக் காரணமான அந்தக் கடிகார கீ செயின்!

எனக்குக் கண்கள் பனித்தன. 

எங்கோ எப்போதோ படித்த கவிதை வரிகள் நினைவுக்கு வந்து மனதைச் சங்கடப்படுத்தின:

ஒன்றாய் இருந்த போது
ஒட்ட மறுத்த இதயம்
தொலைவில் இருக்கும் போதோ
ஒன்றிட ஏங்கித் தவிக்கிறது


பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நான், எப்போது தூங்கினேனோ தெரியவில்லை.  தொலைபேசி அழைப்பு மணியின் சத்தம் கேட்டு எழுந்து போய் எடுத்தேன். 

ஹலோ? 

நான் தான்..

உம் சொல்லுங்க..

சாப்பிட்டியா?

இல்லை.

ஏன்? 

அதான் என்னை ஊருக்குப் போ. இனிமே வரவே வேணாம்னு சொல்லிட்டீங்க.  அப்புறம் என் மேல அப்படியென்ன கரிசனம்?
நான் சாப்பிட்டா ஒங்களுக்கென்னா? சாப்பிடாட்டி என்ன?
எப்ப எனக்கு விமான டிக்கெட் வாங்கித் தரப் போறீங்க?

சீ பைத்தியம்.  ஒரு கோபத்தில சொன்னா, அதை அப்படியே எடுத்துக்கிறதா? ஒங்கிட்டே ஏற்கெனவே சொல்லியிருக்கேன். நினைவு தெரியறதுக்கு முன்னாடியே எங்கம்மா இறந்திட்டாங்க.  தாய்ப்பாசம்னா என்னன்னு தெரியாமலேயே நான் வளர்ந்தேன். சின்ன வயசில சித்திக் கொடுமையை அனுபவிச்சவன் நான். அதனால் பாசத்தை ஒங்கிட்ட எதிர்பார்த்து நான் ஏங்கி நிற்கிறேன். ஆனா நீ எப்ப பார்த்தாலும் அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டேயிருந்தா எந்த ஆம்பிளைக்குத் தான் கோபம் வராது? 
எனக்குக் கிட்டாத அந்த அன்பு ஒனக்கு அளவுக்கு மேல  கிடைச்சிருக்கிறதை நினைச்சு, சில சமயம் ஒன் மேல பொறாமையா கூட இருக்கு.  இன்னிக்குக் காலையில ஒன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வந்த பிறகு மனசே சரியில்லை.  வேலையிலேயும் சரியா கவனம் செலுத்த முடியலே. சாயங்காலம் சீக்கிரம் வரேன். கிளம்பித் தயாரா இரு.  வெளியில போயிட்டு வருவோம். மனசுல ஒன்னும் வைச்சுக்காதே

சரி என்று மகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு மலரும் நினைவுகளைச் சுமந்து கொண்டிருந்த பழைய நாட்குறிப்பை எடுத்து அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டுத் துவங்கப் படாமலே கிடந்த புது வருட நாட்குறிப்பை எடுத்துத் தூசி தட்டி எழுதத் துவங்கினேன்.

நேற்று என்பது முடிந்து போனது.  இனி திரும்ப வராது;
நாளை என்பது நிச்சயமில்லாதது; அது வராமலே போகலாம்; இன்று என்பது மட்டுமே நிஜம்; எனவே இன்றைய தினத்தை நான் மகிழ்ச்சியாக கழிப்பேன்


Thursday 1 March 2012

காலங் கடந்த பின்பு…



                                                        (படம்:- நன்றி உயிரோசை)
                                                  

மழலையின் பிறந்த நாளுக்குப்
பரிசாய்க் கிடைத்த பொம்மை
அழுக்காகி விடுமென்று பயந்து
குழவியிடமிருந்து பிடுங்கிக்
காட்சிக்கு வைத்த அம்மாக்களில்
நானும் ஒருத்தி.