நல்வரவு

வணக்கம் !

Friday 17 January 2014

கவிஞர் உமாமோகனின் நூல் வெளியீட்டு விழா


உமாமோகனின் நூல் வெளியீட்டு விழா 11/01/2013 மாலை ஆறேகால் மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட இனிதே துவங்கியது.
இடம் புதுச்சேரி 81 லப்போர்த் வீதியில் அமைந்துள்ள  PMSSS அரங்கு
வெளியிடப்பட்ட நூல்கள்:-
1.    ‘டார்வின் படிக்காத குருவி,’ கவிதை தொகுப்பு -முரண்களரி படைப்பகம்.
2.   ‘வெயில் புராணம்,’ பயண அனுபவங்கள் - அகநாழிகை பதிப்பகம்.

எங்கள் மண்ணின் மைந்தரும் புரட்சிக்கவிஞருமான பாரதிதாசன் அவர்களின் மகன், மன்னர் மன்னன் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.


முரண்களரி பதிப்பகத்தின் யாழினி முனிசாமி வரவேற்புரை வழங்க எழுத்தாளர் ‘ஆயிஷா’ இரா.நடராஜன் நூல்களை வெளியிட, கவிஞர் சுகிர்தராணி அவற்றைப் பெற்றுக் கொண்டார்.

நூல் ஆய்வு செய்தவர்கள் முனைவர் நா.இளங்கோ & இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷனின் துணை. பொதுச் செயலாளர் எஸ்.வி. வேணுகோபால் ஆகியோர்.
இரவு ஒன்பதரைக்கு மேல் விழா நீண்டாலும், அரங்கு நிறைந்த சபையும் இறுதிவரை பொறுமை காத்த அவையோரும் விழாவின் சிறப்பம்சங்கள். 

இனி விழாவில் பேசியவர்களின் உரையிலிருந்து முக்கிய சாராம்சம்:
ஆயிஷா நடராஜன் ‘டார்வின் படிக்காத குருவி,’ என்ற தலைப்பை எடுத்துக் கொண்டு அலசினார்.  டார்வின் படிக்காத குருவி  அல்லது குருவியைப் படிக்காத டார்வின் என்று இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் என்றவர்  சிட்டுக்குருவி டார்வினின் Fittest of the survival படித்திருந்தால், காக்கையைப் போல் பிழைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என்றார்.

இந்தத் தொகுப்புக்கு இந்தத் தலைப்பு வைக்கவேண்டியதன் அவசியம் என்ன என்பதைப் பற்றிப் பேசியவர்,  உலகளவில் பெண்கவிஞர்கள் சிலர் வைத்த தலைப்புகள் எப்படி உலகையே புரட்டிப் போட்டன என்று விளக்கினார்.

ஜெர்மனியைச் சேர்ந்த பெண்கவிஞர்  ஆவா என்பவர் ஏசு கிறிஸ்து என்பதை மாற்றி மரியா கிறிஸ்து என்ற தலைப்பில் கவிதை புத்தகம் வெளியிட்டது பற்றியும், புத்தகம் தடைசெய்யப்பட்டு வாடிகனால் கைது செய்யப்பட்டதையும் சொன்னார்.  சாந்தாகிளாஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவாகத் தான் இருக்க வேண்டுமா?  கிறிஸ்துமஸ் பாட்டியாக ஏன் இருக்கக் கூடாது என்று கிறிஸ்துமஸ் பாட்டி பெயரில் எழுதப்பட்ட கவிதை பற்றியும் விவரித்தார்.     

‘They wont rape us alive’ ‘Born without Bhardha’   என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளைப் பற்றிப் பேசியவர், பெண்ணின் உடல்மொழி சம்பந்தப்பட்ட கருத்துக்கள் தாம் இன்றைய பெண்ணியத்தில் முக்கியமாக பேசப்படுவதாகச் சொன்னார். இறுதியில் டார்வின் படிக்காத குருவியை யாரும் படிக்காமல் இருந்து விடாதீர்கள் என்று சொல்லிப் பேச்சை முடித்தார் நடராஜன்.

அடுத்து கவிஞர் சுகிர்தராணி பேசினார்:-   

விழாவில் கலந்து கொள்வதற்காக தாம் வந்த பேருந்தில், அழுக்கு உடையோடு துர்நாற்றம் வீச மூதாட்டி ஒருவர் ஏறியதும், அழுக்கு எங்கே தங்கள் மீது ஒட்டிக் கொண்டு விடுமோ என்ற பயத்தில் விலகியோடிய மக்களைப் பற்றியும், அந்தம்மாளுக்காக எழுந்து தன் இருக்கையைக் கொடுத்தவுடன், ‘மகராசியா இரும்மா,’ என்று அவர் தம் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தது பற்றியும் சிலாகித்துப் பேசியவர், உமாமோகனின் பெரும்பாலான கவிதைகளில் அந்த மனித நேயத்தையும், நெருக்கத்தையும் தாம் உணர்வதாய்ச் சொன்னார்.  இதற்கு எடுத்துக்காட்டாக அவர் சொன்ன கவிதை:-

“அவனுக்கும்
மனிதன்
என்று தான் பெயர்.
மஞ்சளாய் பூத்தாலும்
மஞ்சள் செம்பருத்தி
என்று அழைப்பது போல்.
பசித்த வயிற்றின்
எரிச்சல் உணராதவனும்
நேசம் சமூகத்தின் மீது
ஆடைக்கிழிசலின்
அவமானம் உணராதவனும்
ஏக்கவிழிக் குழந்தையின்
சடைத்தலைக்குச்
சலிப்பவனுமான
அவனுக்கும் மனிதன்
என்று தான் பெயர்.” 
நூலாய்வு செய்த முனைவர் நா.இளங்கோவன் ‘நாற்காலிப்பிசின்,’ என்ற குறியீட்டுக்கவிதையைப் பாராட்டிப் பேசினார்.  ‘நிராகரிக்கப்பட்ட வானவில்,’ அவர் குறிப்பிட்டுப் பேசிய இன்னுமொரு கவிதை.

“என் கையில ஒரு காலிப்பையோடு வந்திறங்கினேன்
எனக்கான வானவில் கிட்டாதாததால்
இட்டு வைத்திருக்கிறேன்
பழைய காகிதம், பால்கவர்
உடைந்த பிளாஸ்டிக், பாட்டில் மூடி இத்யாதிகளை.”

இக்கவிதையில் வானவில்லை எதிர்நோக்கியிருப்பவர் வேறு யாருமில்லை, கவிஞர் உமாமோகனே தான் என்று சொன்னவர், ஒரு  கவிஞருக்கே உரித்தான கர்வம் இதில் வெளிப்படுவதாகச் சொன்னார்.
இறுதியில் வேணுகோபால் இந்நூலில் தம்மைக்  கவர்ந்த கவிதைகள் சிலவற்றை வாசித்துக் காட்டினார்.   

ஆற்றின் மேல் ஒரு சமாதி (பழைய பாலம்) என்ற கவிதையைப் பற்றிப் பேசும் போது தமக்குத் தெரிந்த
‘பாலத்து மீது சத்தத்தோடு ரெயில்
கீழே  மெளனமாக மணல்,’  என்ற வரிகளை நினைவு கூர்ந்தார்.     

தானே புயல் பற்றிய கவிதையின்
“ஏதுமற்ற வெளியில்
வெளிச்சம் படர்ந்திருக்கிறது
இதில் இருள் நிறைந்திருக்கிறது,”
என்ற வரிகளைச் சிலாகித்துப் பேசினார்.

அபி உலகம், ஈரமான ஆரம், சருகு படிந்த கூடுகள் என்ற கவிதைகளையும்  வேணுகோபால் உட்பட அனைவரும் பாராட்டிப் பேசினார்கள்.

இறுதியில் அனைவருக்கும் உமாமோகன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது. 
அருமையான கவிதைகள் நிறைந்த இந்த நூலை அனைவரும் வாங்கிப் படித்து இன்புறுங்கள்.    

Tuesday 14 January 2014

கோலங்கள்













எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!

வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் தமிழகத்தில் எந்தக் காலத்தில் துவங்கிற்றோ தெரியாது.  இதைப்பற்றி தமிழிலக்கியத்தில் குறிப்பு ஏதும் உள்ளதா என்பதைத் தமிழறிஞர் யாரேனும் தெரிவித்தால் மகிழ்வுடன் நன்றி சொல்வேன். 

அடுக்கு மாடி குடியிருப்பு வந்த பின்னர், கோலம் போடும் பழக்கம் அறவே நின்று விட்டது என்று புலம்புவோர் உண்டு.  வாசல் கிடைத்தால் கோலம் போடுவதற்கு மகளிர் இன்னும் தயாராகத் தான் இருக்கிறார்கள் என்பதை மேலே நான் வெளியிட்டிருக்கும் கோலப் புகைப்படங்களே சாட்சி. 

மார்கழி மாதம் துவங்கிப் பொங்கல் வரை எங்கள் தெருவில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு கோலம் வரைந்து தெருவை அழகுபடுத்துவது கண்கொள்ளாக்காட்சி.  இதில் வேலைக்குப் போகும் பெண்களும் அடக்கம் (அமோக விற்பனை என்பதால் வண்ணப்பொடி விற்பவனின் வண்டி தினமும் எங்கள் தெருவில் ஆஜர்)
  
காலையில் நேரமில்லை என்பதால் முதல் நாளிரவே ஆற அமர கோலம் வரைந்து பல வண்ணப்பொடிகள் தூவி அலங்காரம் செய்து விட்டுத் தூங்கச் செல்வது வழக்கமாகி விட்டது.  இரவு முழுதும் வண்ணப்பொடிகள் பனியில் நனைந்து ஒரே சீராக பெயிண்ட் அடித்தாற் போல் கோலம் முழுவதும் பரவி அழகுற காட்சியளிக்கின்றன. 

காலத்திற்கேற்ப கோலமும் தன் கோலத்தை மாற்றி வருகின்றது.  என் அம்மாக்காலத்தில் பெரும்பாலும் ஜாங்கிரி பிழிவது போல் சிக்குக் கோலம் போடுவதுதான் வழக்கத்திலிருந்தது.  இருபது, இருபத்திரெண்டு எனப் புள்ளிகள் வைத்து தெருவை அடைத்துப் போடப்படும் கோலங்கள், மங்கையரின் திறமையைப் பறைசாற்றும்.  இக்கோலத்தைப் போடுவதற்கு நல்ல பயிற்சியும் திறமையும் தேவை.    

ஒரு புள்ளியைத் தவறுதலாக விட்டுவிட்டாலோ, இரண்டாவது புள்ளியில் வளைய வேண்டிய கோடு, மூன்றாவது புள்ளிக்கு மாறிவிட்டாலோ, அவ்வளவு தான். சிக்குக் கோலம் பாதியில் சிக்கிக் கொண்டு தவிக்கும்!  புள்ளி வைப்பதிலும் கவனம் தேவை.  முதல் வரிசையிலிருந்து முடிவு வரை, ஒரே சீராக நெருக்கமாக வைத்துக் கட்டு செட்டாகப் போடப்படும் கோலங்களை வைத்தே ஒருவரின் கோலத் திறமையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  (இப்போது வெகுசிலரே சிக்குக் கோலம் போடுகின்றனர்.  பெரும்பாலோர் சுலபமாகப் போடும் கோலத்தைத் தேர்ந்தெடுத்துச் சுற்றிலும் நகாசு வேலை செய்து பெரிதாக ஆக்கிவிடுகின்றனர்.)

 அக்காலத்துப் பெண்பிள்ளைகள் சிறுவயதிலிருந்தே இரண்டு, நான்கு புள்ளி எனத் துவங்கிப் படிப்படியாக பெரிய அளவில் கோலம் போடப் பழகினார்கள். பழங்காலத்தில் கோலம் போடுதல், பெண்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டியதொன்று.

சில காலம் கழித்துப் புள்ளிகள் வைத்து பூக்கோலம் போடத் துவங்கினார்கள்.  சிக்குக் கோலம் போல இது அவ்வளவு கடினமானதல்ல.  புள்ளி தவறாகிவிட்டாலோ, விடுபட்டுப் போய்விட்டாலோ சிரமம் ஒன்றுமில்லை.  புள்ளியில்லாமலே அதிகப்படியான கோடுகளை வரைந்து தவறைச் சரிசெய்து விடலாம்.  வரையும் திறமை உள்ளவர்கள், கற்பனைத்திறன்  உள்ளவர்கள் புள்ளியில்லாமலே அழகான பூக்கோலம் போட்டு விட முடியும்.

பழங்காலத்தில் அரிசி மாவினால் கோலம் போட்டார்கள்.  (பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் அது உணவானது) அரிசியின் விலை ஏற ஏற கல்மாவு புழக்கத்துக்கு வந்தது.
சிக்குக் கோலத்தை விடப் பூக்கோலம் போடுவது எளிதாயிருந்ததால் மங்கையரிடையே இது வரவேற்பைப் பெற்றது.  நாளடைவில் வெண்மை நிறத்தில் இருந்த பூக்கோலத்தில் வண்ணப்பொடிகள் தூவி அழகுபடுத்துவது நடைமுறைக்கு வந்தது.  துவக்கத்தில் வண்ணப்பொடியில் கோலமாவைக் கலந்து தூவினார்கள்.  பின் தவிடு, மணல் என வெவ்வேறு பொருட்கள் கலக்கப்பட்டன.  செங்கல் தூளைக் காவி வண்ணத்துக்கும், பயன்படுத்திய காபிபொடியை பிரவுன் வண்ணத்துக்கும் பயன்படுத்தினர். தற்காலத்தில் பல்வேறு வண்ணங்களில் சாயப்பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.  இப்பொடிகளைத் தூவி வரையப்பட்ட கோலங்கள் நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. 

இப்போது பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் டைல்ஸ், மார்பிள்ஸ் இருப்பதால் அரிசியைத் தண்ணீர் ஊற்றி அரைத்து நீர்க்கோலம் போடும் பழக்கம் நகரங்களில் முற்றிலுமாக மறைந்து விட்டது.  (சிலர் மைதாவைக் கரைத்தும் போடுவர்) மண், சிமெண்ட், கல் தரைகளில் இந்த நீர்க்கோலம் போட்டு, அது காய்ந்தவுடன் பார்த்தால் வெள்ளை வெளேர் என்று பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்! 
வட இந்திய ரங்கோலி வகை கோலங்களும் இப்போது பிரபலமாயுள்ளன. 
(புகைப்படக்கலையில் எனக்கு அவ்வளவு தேர்ச்சியில்லை.  கைபேசி காமிராவினால் என்னால் முடிந்தளவு கோலங்களைப் படமெடுத்து உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.)
பி.கு.  தமிழரது திருநாளுக்கான வாழ்த்தைக் கூட நம் மக்கள், பொங்கல் கோலங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருப்பது தான் மனதுக்கு நெருடலான விஷயம்.  பொங்கல் கோலத்தில் கூட தமிழ் ஒளிரக் காணோம்!



கோலங்களின் அணிவகுப்பு தொடரும்…..

Thursday 9 January 2014

இன்று பறவைகள் தினம் தொடர்ச்சி....

                                                                       

      நாய், பூனை போன்று பறவைகள் வீட்டில் மனிதனால்                   வளர்ப்பதற்கென்று பழக்கப்பட்டவை அல்ல. காட்டில்                     சுற்றித்திரியும் அதன் இனத்திடமிருந்து எந்த வகையிலும்               வேறுபட்டவையல்ல.    
  

பறவைகளிடமிருந்து டி.பி போன்ற நோய்கள் மனிதனுக்குப் பரவக்கூடும்.பறவைகளின் சிறகுகளிடமிருந்து உதிரும் தூசியும் துகளும் ஆஸ்துமா நோயாளிகளின் நோயை அதிகமாக்கும் அபாயமுண்டு.  
   

கிளிகளின் ஆயுள் 20 லிருந்து 50 ஆண்டுகள் வரை. .  எனவே கிளியை வளர்க்க விரும்புபவருக்கு ஆயுட்கால பொறுப்புணர்ச்சி தேவை.

பறவைகள் சுறுசுறுப்பாக இயங்க அவை புழங்கும் இடம் ஓரளவு பெரியதாயும் வசதியாயும் இருக்க வேண்டும்.  பூனை, நாய் போன்றவை இருக்கக் கூடாது.  சுழலும் மின்விசிறி கூடவே கூடாது. 

தானியம் போன்ற ஒரே வகையான உணவு வகை கூடாது.  அவ்வப்போது பழம், காய்கறி போன்றவையும் உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பறவைகளுக்கு வைட்டமின் டி கிடைக்க தினமும் குறைந்தது நான்கு மணி நேரமாவது சூரிய ஒளியில் நனைவது அவசியம்.  தினந்தோறும் பத்து மணி நேரம் தூக்கமும் அவசியம்.
  

மனிதனைப் போலன்றிப் பறவை ஓவ்வொரு முறை மூச்சு விடும் போதும், அதன் நுரையீரலிலிருந்து முழுவதுமாக காற்றை வெளியேற்றி விடும்.  மூச்சை உள்ளிழுக்கும் போது வெளியிலிருந்து அதிகளவு ஆக்சிஜனும் காற்று மண்டலத்திலுள்ள மாசும்  உள்ளே புகுந்து நுரையீரலை நிரப்பும்.  எனவே சிகரெட் புகை, இரசாயன வண்ணங்களின் நெடி போன்றவை பறவைகளுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். உடனடி மரணத்தை ஏற்படுத்தும்.

எச்சமும், கழிவும் நிறைந்த பறவை கூண்டை அடிக்கடி சுத்தப்படுத்தி நோய்க்கிருமிகளிலிருந்து பறவைகளைக் காப்பாற்ற வேண்டும்.       

எல்லாவற்றுக்கும் மேலாக பறவைகளை நோயிலிருந்து காக்க அவ்வப்போது விலங்கு மருத்துவரின் ஆலோசனை தேவை.

இத்தனை விதிகளையும் வாசித்த பிறகு அச்சச்சோ! பறவை வளர்ப்பா?  எனக்குச் சரிப்பட்டு வராது என்று தோன்றுகிறதா?  ‘இருக்கிற வேலையில் இதைக் கவனிக்க எனக்கு எங்க நேரமிருக்கு?’ என்று புலம்புவரா நீங்கள்?  என் உடம்புக்கு வைத்தியம் பார்த்துக்கவே என்னால முடியல.  இதுல பறவைக்கு வேற வைத்தியம்  பார்க்கணுமா என்று சலித்துக் கொள்கிறீர்களா?
உங்களுக்கு இனிப்பான ஒரு செய்தி.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.  பறவை வளர்க்க வேண்டும் என்ற ஆசையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.  உங்களது பொன்னான நேரமும் பணமும் மிச்சம்.  அவைகளுக்கும் உங்களது இந்த முடிவால் நன்மை தானே தவிர,  இழப்பு ஏதுமில்லை.                                                                 
ஏற்கெனவே வளர்ப்பவராயிருந்தால், தவறு ஏதும் செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பறவைகளுக்குக் கூண்டைத் திறந்து விடுதலை கொடுத்து வாழ்த்தி அனுப்புங்கள்!  வானவெளியில் அவை உற்சாகத்துடன் சிறகடித்துப் பறப்பதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவீர்கள்!






Sunday 5 January 2014

'இன்று உலக பறவைகள் தினம்'




அழிந்து வரும் பறவையினங்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜனவரி 5 ஆம் தேதி உலக பறவைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இயற்கை வளம், காடுகள் அழிந்து வருதல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல், நீர் நிலைகள் குறைந்து வருதல் மற்றும் மாசு படுதல், பறவைகளைச் சட்ட விரோதமாகப் பிடித்துச் சுகாதாரமற்ற முறையில் கூண்டிலடைத்து விற்பனை செய்தல், செயற்கை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்போதைய வேளாண்முறையில் அதிகளவு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பறவையினங்களில் 12 சதவீதம் அழிவின் விளிம்பில் இருப்பதாக பறவை ஆர்வலர்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.     ஏற்கெனவே கூட்டங்கூட்டமாக இருந்த சிட்டுக்குருவி இனம் பெருமளவு அழிந்து விட்டது. எனவே மக்களிடையே பறவையினங்களைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தப் பறவைகள் தினத்தின்  முக்கிய நோக்கம்.                                          
பறவைகள் வீட்டில் வளர்க்கப்பட வேண்டிய பிராணிகள் அல்ல.  சுதந்திரமாகத் தம்மினத்தோடு பறந்து திரிந்து களிக்க வேண்டியவற்றின் சிறகுகளை முறித்துக் கூண்டிலடைத்து வாழ்நாட் முழுக்க சிறையில் வைப்பது முறையற்ற செயல்.    இதை எழுதும் போது சிறுவயதில் நான் பள்ளியில் படித்த கவிமணியின் பாடல் நினைவுக்கு வருகின்றது:-         

"பாலைக் கொண்டு தருகின்றேன்
பழமும் தின்னத் தருகின்றேன்
சோலைக்கோடி போக வழி
சுற்றிப்பார்ப்பதேன் கிளியே?
காட்டி லென்றும் இரை தேடிக்
களைத் திடாயோ? உனக்கிந்த
கூட்டில் வாழும் வாழ்வினிலே
குறைகளேதும் உண்டோ சொல்?
என்று சிறுவன் கேட்பான்.

அதற்கு அவன் வளர்க்கும் கிளியோ,
சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியா பாலகனா
எண்ணி வினைகள் செய்யானா?                                                
பாலும் எனக்குத் தேவையில்லை
பழமும் எனக்குத் தேவையில்லை 
சோலை எங்கும் கூவிநிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா”                         
என்று பதில் சொல்லும்.  

கிளிகளைக் கூண்டிலடைத்து வளர்ப்பது தீங்கான செயல் என்பதை எளிய 
சொற்களில் எவ்வளவு அழகாக குழந்தைகளின் மனதில் படும்படி கவிமணி 
எழுதியிருக்கிறார்!     பறவைகளைக் கூண்டிலடைத்து வளர்ப்போர் கடை
பிடிக்க வேண்டிய விதி முறைகளை மக்களிடையே எடுத்துச் சொல்வதும் இத்தினத்தின் இன்னொரு நோக்கம்:- அவற்றைப் பற்றி நாளை எழுதுகிறேன்...                        
              
                                                                                                              


Wednesday 1 January 2014

கொற்கை நாவலுக்கு விருது

2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஜோ.டி.குருஸ் எழுதிய ‘கொற்கை,’ நாவலுக்குக் கிடைத்துள்ளது.  இது இவர் எழுதிய இரண்டாவது நாவல். 
2004 ஆம் ஆண்டு ஆழி சூழ் உலகு எனும் தமது முதல் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை ஈர்த்தார்.  அது தமிழக அரசின் பரிசினைப் பெற்றது.  திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான உவரியைச் சேர்ந்த இவர், தாம் பிறந்த கிராமத்து மீனவர்களின் வாழ்வை அடிப்படையாக வைத்து முதல் நாவலை எழுதினார்.
இவ்விருதுக்குத் தேர்வானது குறித்து இவரிடம் கேட்கப்பட்ட போது, “கடற்கரை சமுதாயத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.  இதன் மூலம் சமவெளி சமுதாய மக்களின் பார்வை நீர் தேவதையின் மீது படும் என நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
ஹிந்து நாளேட்டிற்கு அவர் அளித்த பேட்டியில் அவரது அடுத்த நாவல் பற்றிய கேள்விக்கு, “முதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது.  இரண்டாவது நாவல் பாய்மரக்கப்பலோடு தொடர்புடையது.  அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்புகிறேன்.  குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக்கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும்,” என்று சொல்லியிருக்கிறார். 
கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் ‘ஆழ் சூழ் உலகு,’ வாங்கி வைத்திருக்கிறேன்.  ஓராண்டு கழிந்த பின்னும் அதை இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை.  அதை முடித்த பிறகு தான் கொற்கை வாங்க வேண்டும்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள கொற்கை’  1174 பக்கங்களைக் கொண்டது.  நெய்தல் நில மக்களின் நூற்றாண்டு கால வாழ்க்கை வரலாற்றை அலசும் நாவல். 
எந்தவொரு இலக்கிய பின்புலமும் இன்றி, சாதாரண ஒரு கிராமத்தில் தோன்றி மிக உயர்ந்த இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்று தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஜோ டி குருஸை பாராட்டி வாழ்த்துவோம்!