நல்வரவு

வணக்கம் !

Sunday 25 January 2015

இன்று முதல் ஒரு வாரம் வலைச்சர ஆசிரியையாக நான்!

எல்லோருக்கும் வணக்கம்! 26/01/2015 முதல் 01/02/2015 வரை வலைச்சரம் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்! 

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வலையுலகுக்குத்
தெரிந்தும் தெரியாத பதிவர் நான்….

இருந்தும் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்புக்கு என்னைப் பரிந்துரை செய்த திரு.கோபு சாருக்கும், அதையேற்று நியமனம் செய்த திரு. சீனா சாருக்கும், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வலைப்பூ துவங்கிய புதிதில்,  விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்திய கீத மஞ்சரிக்கும், யுவராணி தமிழரசனுக்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

என் சாதனை என்று பெருமையாகச் சொல்லக்கூடிய செய்தி எதுவுமில்லை.  அரசு வங்கியொன்றில் சீனியர் எழுத்தராகப் பணியாற்றும் எனக்குப் பிடித்த விஷயங்கள், வாசிப்பும் எழுத்தும். 

வாசிப்புப் பழக்கத்துக்கு ஆசான் அப்பா.  சிறுவயதிலிருந்தே எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், பிரபலமான வார இதழ்களுக்குக் கதைகள் எழுதியனுப்புவேன்.  ஆனால் அவை எல்லாமே ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்,’ என்ற முத்திரையுடன், போன வேகத்தில் திரும்பி வந்தன.

என் தம்பி ‘முத்துச்சிப்பி’ என்ற பெயரில், சில மாதங்கள் கையெழுத்து இதழ் நடத்தினான்.  அதில் கதை, கவிதை, நகைச்சுவை துணுக்கு என எல்லாமும் எழுதி, அதற்கேற்ற படங்களையும் அவனே வரைவான். நானும் அதில் எழுதினேன்.  எங்களது படைப்புக்களைப் பற்றி, ‘ஆகா பிரமாதம்!’ என்று நாங்களே வாசகர் கடிதமும் எழுதிக் கொள்வோம்!

பெரியவர்களானதும், அப்பாவை ஆசிரியராகப் போட்டு வார இதழ் துவங்கி நடத்த வேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது.  அப்போது தானே நம் எழுத்து முழுவதையும் பிரசுரிக்க முடியும்?  அக்கனவு காலங்கடந்து  தற்காலத்தில் இணையம் மூலம் மெய்ப்பட்டிருக்கிறது!

Friday 2 January 2015

நான் ரசித்த துணுக்குகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து!
என் கைபேசியில் அவ்வப்போது வரும் ஆங்கிலக் குறுஞ்செய்திகளுள்  நான் மிகவும் ரசித்தவற்றை நீங்களும் ரசிக்க, மொழியாக்கம் செய்து இங்கே பகிர்ந்துள்ளேன்:-


துணுக்கு 1
அம்மா:-  “திப்பு சுல்தான்னா யாருன்னு தெரியுமா ஒனக்கு?”
பையன்:-  “தெரியாது”
அம்மா:- “அப்பப்ப கொஞ்சம் படிப்புலேயும் கவனம் செலுத்து”
பையன்:-  “நிம்மி ஆண்டின்னா யாருன்னு தெரியுமா ஒங்களுக்கு?”
அம்மா:- “தெரியாதே”
பையன்:- “அப்பப்ப கொஞ்சம் அப்பா மேலேயும், கவனம் செலுத்துங்க”

துணுக்கு 2
பாராளுமன்றத்துக்கு எதிரில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது ஒரு கார்.. 
திடீரென்று காரின் கண்ணாடியைத் தட்டினான் ஒருவன்.  ஜன்னலை இறக்கிய டிரைவர், “என்ன பிரச்சினை இங்க?” என்று கேட்டார்.

“இந்தியாவோட எல்லா அரசியல்வாதிகளையும் தீவிரவாதிங்க கடத்திட்டாங்க.   அவங்களை விடுவிக்கப் பிணையத்தொகையா நூறு  மில்லியன் டாலர் பணம் கேட்கிறாங்க.  அதைக் கொடுக்கலேன்னா எல்லார் மேலேயும்,  பெட்ரோல் ஊத்திக் கொளுத்தப் போறாங்களாம்.   நாங்க ஒவ்வொரு காராப் போயி, நன்கொடை வசூலிச்சிக்கிட்டிருக்கோம்,” என்றான் அவன். 

ஒவ்வொருத்தரும் சராசரியா எவ்ளோ கொடுக்கிறாங்க? என்றார் டிரைவர்.

ஏறக்குறைய இரண்டு லிட்டர் என்றான் அவன்!


துணுக்கு 3
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது என் நண்பர் நன்கு குடித்த பிறகு போதையில் கார் ஓட்டக்கூடாது என்று முடிவெடுத்துக் காரை ஹோட்டலிலேயே விட்டுவிட்டு, பேருந்து ஒன்றில் வீட்டுக்குப் பயணமானார்.  தான் எடுத்த இந்த முடிவைப் பற்றி அடுத்த நாள் அவருக்குப் பெருமை.தாங்கவில்லை.

இருக்காதா பின்னே? அதற்கு முன்னர், அவர் பேருந்தே ஓட்டியதில்லையாம்!

துணுக்கு 4
ஆசிரியர்: “ஏன் தாமதமா வர்றே?”

மாணவன்:- “அம்மாவும், அப்பாவும் சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க சார்!

ஆசிரியர்:- “அவங்க சண்டை போட்டதுக்கும்,  நீ தாமதமா வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?”


மாணவன்:- “என்னோட ஒரு செருப்பு அப்பா கையிலேயும்,  இன்னொன்னு அம்மா கையிலேயும் இருந்துச்சி சார்!”

துணுக்கு 5

குடித்து விட்டு வீடு திரும்பினான் கணவன்,  மனைவி திட்டுவாளே என்ற பயத்தில் மடிக்கணிணியை எடுத்து வைத்து அவசரமாகத் தட்டச்சு செய்யத் துவங்கினான்.

இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கிறியா?

இல்ல இல்ல டார்லிங்!

இடியட்! அப்புறம் ஏன், என்னோட சூட்கேஸை எடுத்து வைச்சிக்கிட்டு டைப் செய்யற மாதிரி நடிக்கிறே?


துணுக்கு 6
கம்பெனியில் ஜூனியர் ஒருவன் தவறுதலாக முதலாளி தொலைபேசி எண்ணுக்கு டயல் செய்து, “என் அறைக்கு இரு நிமிடங்களில் காபி அனுப்பு,” என்றான்

“யாருடன் பேசுகிறோம் என்று தெரியுமா உனக்கு?” என்று சத்தம் போட்டார் அவர்.

“தெரியாது”

“நான் தான் இந்த கம்பெனியோட பாஸ்”

“யாருடன் பேசுகிறோம் என்று தெரியுமா உங்களுக்கு?” என்று அதே தொனியில் திருப்பிக் கேட்டான் இவன்.

“தெரியாது:

“நல்லவேளை தெரியவில்லை; கடவுளுக்கு நன்றி!” என்று மனதுக்குள் சொன்னவாறு உடனே இணைப்பைத் துண்டித்தான் ஜூனியர்.


துணுக்கு 7
பாகிஸ்தான் சிறுவன் அமெரிக்கப் பள்ளியில் சேர்ந்தான்.

“உன் பெயர் என்ன?” என்றார் ஆசிரியை.

“நதீர்!”

“நீ இப்போது அமெரிக்காவில் இருக்கிறாய்   இன்றிலிருந்து உன் பெயர் நதீர் இல்லை.  ஜானி,” என்றாள் அவள்.

பையன் வீட்டுக்குப் போனதும், முதல் நாள் பள்ளி அனுபவம் பற்றிக் கேட்டாள் அம்மா.

“நான் இப்போது அமெரிக்கன்.  இனிமேல் என்னை ஜானி என்று தான் கூப்பிட வேண்டும்”

பெற்றோர் இருவரும் கடுப்பாகி, பையனை அடித்துத் துவைத்து விட்டனர்.

மறுநாள் காயங்களுடன் சென்ற அவனைப் பார்த்துக் கேட்டாள் ஆசிரியை:

“ஜானி என்ன ஆச்சு உனக்கு?”

“மேம்! நான் அமெரிக்கன் ஆகி சரியாக ஆறுமணி நேரத்துக்குப் பிறகு, இரு பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டேன்,” என்றான் அவன்.


துணுக்கு 8

ஒரு நாள் படகு போன்ற பெரிய காரில் பயணம் செய்து கொண்டிருந்த பணக்காரர் ஒருவர், சாலையின் ஓரத்தில் இருவர் புல்லைத் தின்று கொண்டிருந்ததைக் கண்டவுடன் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்..

அவர்களுள் ஒருவனைப்பார்த்து, “ஏன் புல்லைத் தின்றே?” என்று கேட்டார்

“சாப்பாடு வாங்க எங்கக்கிட்ட பணம் இல்ல;  அதனால் தான் புல்லைத் தின்றோம்,” என்றான் அவன்.

“அப்படீன்னா என் வீட்டுக்கு வா,” என்றார் அவர்

“ஆனால் எனக்கு ஒரு மனைவியும் அஞ்சு பசங்களும் இருக்காங்களே!”

“அதனால என்ன? அவங்களையும் அழைச்சிட்டு வா,”

இன்னொருவனை பார்த்து, “நீயும் வா,” என்றார்

காரில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு பயணிக்கையில் ஒருவன் சொன்னான்

“சார் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு; எங்க எல்லாரையும் ஒங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப்  போறதுக்கு ரொம்ப நன்றி.”

“அதனால பரவாயில்லை. ஒங்களுக்கு உதவி செய்றதுல எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.   உங்க எல்லோருக்கும் என் வூடு ரொம்பப் புடிக்கும்.  அங்க ஒரு மீட்டர் அளவுக்கு புல் வளர்ந்திருக்கு” என்றார் அவர்.