நல்வரவு

வணக்கம் !

Friday 27 February 2015

பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) – 1 - கரிச்சான்


நான் ஒரு பறவை பிரியை.  சிறு வயது முதலே பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது (BIRD WATCHING) மிகவும் பிடித்தமான செயல். 

நம் மண்ணில் வாழும் பறவைகளைப் பற்றி, முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வருத்தம், பல ஆண்டுகளாக இருந்தது.

அக்கம் பக்கத்தில் புதிதாகப் பார்க்கும் பறவையின் சரியான பெயர் கூடத் தெரியவில்லை; ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்வதால் எது சரி, எது தவறு? என்பதில் குழப்பம்.

தமிழில், ஆங்கிலத்தில் இருப்பதைப் போலப் பறவைகளைப் பற்றிய தரமான புத்தகங்களும் இல்லை.   
    
இச்சூழ்நிலையில் ப.ஜெகநாதன் & ஆசை எழுதி க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பறவைகள் அறிமுகக் கையேடு,' என்ற புத்தகம், என் நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து, என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துள்ளது. 

நம்மூரில் பரவலாகக் காணப்படும் 88 பறவைகள் பற்றிய விளக்கத்தைப் புகைப்பட கலைஞர்கள் எடுத்த நேர்த்தியான 166  வண்ணப் படங்களுடனும், அவற்றைப் பற்றிய சிறு குறிப்புடனும் கொடுத்திருப்பது இக்கையேட்டின் சிறப்பு.

பறவை கவனிப்பின் (BIRD WATCHING) அவசியம் பற்றியும், அதில் ஈடுபடுவோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இது எடுத்துரைக்கிறது. 
தமிழகப் பறவைகள் குறித்த ஆய்வுக்கு உதவக்கூடிய வகையில் பறவையின் பெயர், அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பெயர், அதன் குடும்பம், வாழ்விடம், அதன் சிறப்புக்கள் போன்ற விபரங்களும் இதில் உள்ளன. 

இதில் இருந்த படங்களைப் பார்த்த பின், நான் ஏற்கெனவே பார்த்திருந்த சில பறவைகளின் சரியான பெயர்களை அறிந்து கொண்டேன். 

நான் கவனித்த பறவைகள் பற்றிய விபரங்களை, இக்கையேட்டின் உதவியோடு சரியாக அடையாளங் கண்டு, இத்தொடரில் அவ்வப்போது பகிர எண்ணியுள்ளேன்.

இப்பதிவை வாசிப்பவர்கள், பறவைகளைச் சுலபமாக அடையாளங் காண படங்களை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட இருக்கிறேன்.  (நான் அலைபேசியில் எடுக்கும் படங்கள், அவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்)  
  
பதிவை வாசிக்கும் நண்பர்கள், தங்கள் பகுதியில் இப்பறவைக்கு வேறு பெயர்கள் இருந்தாலோ, இதனைப் பற்றி வேறு விபரங்கள் தெரிந்தாலோ அவசியம் பின்னூட்டமிட்டு, அதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பின்னாளில் நம் பறவைகள் குறித்த ஆய்வுக்கு, அது உதவி செய்யும் என்பதால் தான் இந்த வேண்டுகோள்!

முதலாவதாக அண்மையில் நான் பார்த்த கரிச்சான்.  (BLACK DRONGO)



கரிச்சான் என்றவுடன் உங்களுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் நினைவுக்கு வருகிறாரா?

ஆம்.  கு.ப.ரா.வின் புனைபெயர்களுள் ஒன்று ‘கரிச்சான்,’. 

கு.ப.ராவின் எழுத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் நாராயணசாமி, ‘கரிச்சான் குஞ்சு,’ என்ற புனைபெயரில் எழுதினார்.  இவர் எழுதிய ‘பசித்த மானுடம்,’ புதினம் மிகவும் புகழ் பெற்றது.

பறவையைப் பற்றிச் சொல்லாமல், எழுத்தாளரைப் பற்றிச் சொல்வதும்  ஒரு காரணமாகத் தான்.   

தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?

கரிச்சானை ஏற்கெனவே பல முறை பேருந்தில் பயணம் செய்யும் போது, பார்த்திருக்கிறேன்.  மின்சார கம்பிகளில் ஒய்யாரமாக அமர்ந்து ஊஞ்சல் ஆடியபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 

இதற்கு இரட்டை வால்குருவி என்ற பெயரும் உண்டு.   வாலில் ஒரு பிளவு இருப்பதால், இப்பெயர் வந்திருக்கலாம். 

இது கடந்த வாரம் முதன் முறையாக, எங்கள் தோட்டத்தின் பின்பக்கம் ஒரு கம்பின் மேல் வந்து அமர்ந்தது.  சிறிது நேரத்துக்கொரு முறை பிரகாரம் சுற்றுவது போல், கம்பை வட்டமிட்டுப் பறப்பதும், பின் அதே இடத்தில் வந்து அமர்வதுமாக இருந்தது. குறைந்தது பத்து தடவை களாவது இவ்வாறு செய்திருக்கும்.  பின் மேலெழும்பி பறந்து மறைந்து விட்டது. 

இப்பறவை பற்றிக் கையேட்டிலும், இணையத்திலும் திரட்டிய சுவையான தகவல்கள்:-

இது சமயத்தில் வல்லூறு (SHIKRA) போலக் குரல் கொடுத்து,  மைனா போன்ற பறவைகளைப் பயமுறுத்தி ஓட்டி விட்டு, அதன் இரையைப் பிடுங்கித் தின்னும் இயல்புடையது. 

இது அடைகாக்கும் காலத்தில் தனக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, குஞ்சுகளை அபகரிக்கக் கூடிய காக்கா போன்ற பெரிய பறவைகளைத் தன் எல்லைக்குள் வராதவாறு விரட்டியடித்து விடுமாம்.  எனவே இதற்கு ராஜ காகம் என்ற பெயரும் உண்டு (KING CROW).

எனவே இது அடைகாக்கும் காலத்தில் கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) போன்ற சிறு பறவைகள், கரிச்சானைக் காவல் தெய்வமாகக் கொண்டு, இதன் எல்லைக்குள் தைரியமாகக் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்குமாம்.    

பிற பறவைகளைப் போலவே ஒலியெழுப்புவதற்கு ஒப்புப்போலி ஒலியெழுப்புதல் (MIMICRY) என்று பெயர். 

இதனைக் கருவாட்டு வாலி என்றும் சிலர் சொல்கின்றனர். மேலே குறிப்பிட்ட கையேட்டில், இந்தப் பெயர் கொடுக்கப்படவில்லை யென்பதால், இதனை இப்படியும் அழைக்கலாமா எனச் சரியாகத் தெரியவில்லை.  

வாசிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் அவசியம் சொல்லுங்கள்.                                
 (கரிச்சான் படம் - இணையத்திற்கு நன்றி)

41 comments:

  1. என் நண்பர் ஒருவருக்கு பறவைகளைக் கவனிப்பதில் அலாதி பிரியம். அவருடைய தொடர்பினால் பறவைகளின்மீதான ஒரு வித்தியாசமான பார்வை எனக்குத் தோன்றியது. தங்கள் பதிவு மூலமாக ஆச்சர்யப்படத்தக்க செய்திகளை அறியமுடிந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடனுக்குடன் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவதற்கு மிகவும் நன்றி சார்! உங்கள் நண்பருடன் சேர்ந்து பறவைகளைக் கவனித்த சுவாரசியமான விஷயங்களை அவசியம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சார்! மிகவும் நன்றி!

      Delete
  2. ஆகா.. அருமை!.. நெடுநாளைய விருப்பம் இது..

    முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே - சோவியத் புத்தகக் கண்காட்சி தஞ்சையில் நடந்தபோது - பிள்ளைகளுக்கு என உடலியல் மற்றும் பறவை மற்றும் விலங்கியல் புத்தகங்களை வாங்கி வைத்தவன். கல்லூரியில் Natural Science படித்த ஆர்வம்.

    கரிச்சான் குருவிக்கு வலியன் எனும் பெயர் தேவாரத்தில் காணக் கிடைக்கின்றது. இந்த வலியன் வலம் வந்து ஈசனை வணங்கிய திருத்தலம் தான் - திரு ஆரூருக்கு அருகில் உள்ள வலிவலம்.

    ஆனாலும் கரிச்சானுக்கு செல்லப்பெயர் - கருவாட்டு வாலி!.. இதன் உற்ற தோழன் எருமை!.. இருந்தாலும் வீட்டு விலங்குகளுடன் திரிவதில் அலாதிப் பிரியம் இதற்கு..

    கழுகை அடித்து விரட்டும் வீரம்.. நேரில் கண்டு அதிசயித்த தருணங்கள் பல!..

    கடலில் டால்பின் போல நிலத்தில் கரிச்சான்!.. நல்ல துணைவன்!..

    அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்!.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. என் வேண்டுகோளை ஏற்று விளக்கமான பின்னூட்ட மூலம் கரிச்சானைப் பற்றி நிறைய விபரங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக மிக நன்றி துரை சார்!

      ஈசனை வலம் வந்த பறவை, கழுகைக் கூட விரட்டியடிக்கும் என்றெல்லாம் அறிய வியப்பு. இம்மாதிரி தகவல்களை உங்களைப் போன்று தெரிந்தவர்கள் சொன்னால் தான் உண்டு.

      இத்தகைய வலிமை கொண்ட பறவைக்கு வலியன் என்ற பெயர் சாலப்பொருத்தம். இக்குருவியைப் பற்றிய தேவார வரிகளை அறிந்து கொள்ள ஆர்வம். அவசியம் பகிருங்கள்.

      தான் அமர்ந்திருந்த கம்பைப் பிரகாரம் சுற்றுவது போல் பல முறை சுற்றியது என்று நான் எழுதியது, நீங்கள் சொல்வதுடன் ஒத்துப் போகிறது.

      கம்பைச் சுற்றியது போல் லிங்கத்தைச் சுற்றிய பறவைக்கு, நம்மவர்கள் கோவில் கட்டிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். வலிவலம் கோவிலைப் பற்றிக் கேள்விப்படுவது இது தான் முதல் முறை.

      இதன் செல்லப்பெயர் தான் கருவாட்டு வாலி என்றறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் பின்னூட்டத்தைப் படித்தவுடன் அக்காலத்தில் களத்துமேட்டில், கழனிகளில், எருமை மீது கரிச்சான் அமர்ந்து பவனி வந்த காட்சி கண்ணில் நிழலாடுகின்றது.

      பிள்ளைகளுக்குப் பறவை, விலங்கியல் புத்தகங்கள் அக்காலத்திலேயே வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றறிந்து மகிழ்ச்சி. நம் பறவைகளைப் பற்றி, விலங்குகளைப் பற்றி நம் சந்ததிகளுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை.
      உங்களுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி சார்!

      Delete
  3. இதை இலங்கையில் கரிக்குருவி என்போம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களது முதல் வருகைக்கு மிகவும் நன்றி யோகன்! கரிக்குருவி என்று இதற்கு இலங்கையில் பெயர் இருப்பதாக அறிந்து மகிழ்ச்சி. இப்பதிவுக்குத் தொடர்ந்து வந்து பறவைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் யோகன்! மீண்டும் உங்களுக்கு என் நன்றி!

      Delete
  4. என்னைப் பொருத்தவரை எல்லாமே பொதுவாக "குருவி" என்ற கேடகரியில் வந்து விடும்!!!!!!

    நம்முடைய சக பதிவர் சகலகலாவல்லி ராமலக்ஷ்மி பறவைகள் படங்கள் நிறைய எடுத்து முடிந்தவரை அதன் விவரங்களையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரும்படி கூட அவரிடம் கேட்டுக்கொண்டேன். :)))

    உங்கள் பதிவில் உள்ள விவரங்கள் அருமை.

    கீழே உள்ள 'லிங்கி'ல் சென்று பறவைக் காதலர் சலீம் அலியின் புத்தகத்தை நீங்கள் சேமித்துக் கொள்ளலாம். சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் RV பகிர்ந்திருந்தார்.

    https://siliconshelf.files.wordpress.com/2014/06/salim_ali_common_birds.pdf

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். நானும் சேமித்துக்கொண்டேன். மிகுந்த தகவல்கள் அடங்கிய அற்புதமான புத்தகம்.

      Delete
    2. நன்றி ஶ்ரீராம் நானும் சேமித்துக் கொண்டேன்.

      Delete
    3. __/\__ __/\__

      எல்லாப்புகழும் ஆர்விக்கே!

      Delete
    4. “என்னைப் பொருத்தவரை எல்லாமே பொதுவாக "குருவி" என்ற கேடகரியில் வந்து விடும்”

      அப்படிச் சொல்ல முடியாது ஸ்ரீராம்! குருவி என்பது பறவைகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர். ஒவ்வொரு குருவிக்கும் தனித்தன்மை இருக்கிறது. நிறம், தோற்றம், வாழ்விடம், கூடு கட்டும் முறை, உணவு, குரல் என பல விஷயங்களில், பறவைகள் ஒன்றுகொன்று வேறுபடுகின்றன.

      பெயரை வைத்துத் தான் ஒரு குருவியின் தனித்தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். வேம்பு, ஆல் எல்லாமே மரங்கள் தாம். ஆனால் வேம்பு என்று சொன்னவுடனே, அதன் தனித்தன்மையை நம்மால் அறிய முடிகிறது அல்லவா?

      வலியன் என்ற பறவையைப் பற்றித் தேவாரத்தில் இருக்கிறது என்று துரை சார் சொல்லியிருக்கிறார். அது போல் நம் இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற பல்வேறு பறவைகளை, நாம் சரியாக இனங்காண பெயர் மிகவும் முக்கியமல்லவா?

      நிழற்பட கலைஞர் ராமலஷ்மியின் மலர்கள் படங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். பறவைகள் படங்களைப் பார்த்தது இல்லை. இணைப்பு தெரிந்தால் கொடுக்கவும். கண்டிப்பாகப் போய்ப் பார்ப்பேன்.

      சலீம் அலியின் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்ய இணைப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

      பறவையியலாளர் சலீம் அலியின் புத்தகங்கள், க.ரத்னம் எழுதிய தமிழ்நாட்டுப் பறவைகள் புத்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, காட்டுயிர் ஆர்வலர் தியடோர் பாஸ்கரன் ஆலோசனையுடன், மேலே நான் குறிப்பிட்டுள்ள புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டின் முக்கிய நோக்கம், பறவை கவனித்தலின் ஆர்வத்தை மக்களிடம் தூண்டுவதே.
      இதன் ஆசிரியர் ப.ஜெகநாதன் காட்டுயிர் எழுத்தாளர். நேரமிருப்பின் அவரது தளத்தில் இந்தப் பதிவை வாசியுங்கள்:- தமிழ்ப்பறவைகள் குழுவினர் சந்திப்பு
      https://uyiri.wordpress.com/2014/11/09/tamil-birders-meet/

      தொடர்ந்து வந்து பின்னூட்டமளித்து ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!













      Delete
  5. ரசனையான விளக்கம்...

    இன்னும் அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் தனபாலன் சார்!

      Delete
  6. அழகான துவக்கம். கொல்லை நிறைக்கும் பலதரப்பட்ட பறவைகளோடு கரிச்சான்குருவிகளையும் நித்தமும் பார்த்து ரசித்து வளர்ந்திருக்கிறேன். இப்போது பார்த்ததும் பழைய நினைவுகள் வந்து மகிழ்விக்கின்றன. நாங்கள் வாலாட்டிக்குருவி என்று சொல்வோம். எங்கள் தாத்தா வேறுவிதமாக சொல்வார். இடக்கரடக்கல் கருதி இங்கு சொல்லமுடியவில்லை. மாலை வேளைகளில் மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் காட்சி மனம் அள்ளும். பறவைகள் பற்றிய தங்களது ஆர்வத்தை அறிவேன். மனம் நிறைந்த பாராட்டுகள் அக்கா. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கரிச்சான் பழைய நினைவலைகளை மீட்டுக் கொண்டு வந்து மகிழ்ச்சி யளித்திருக்கிறது என்றறிந்து மகிழ்ச்சி கீதா! உன் பதிலின் மூலம் வாலாட்டிக்குருவி என்ற பெயர் இக்குருவிக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன் கீதா! பறவைகளைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான செயல் அல்லவா?

      Delete
  7. Please use these pictures for your articles

    https://www.dropbox.com/sh/h8c2addinas36av/bWduLmkiNF/Some%20Tamil%20Nadu%20Birds#/

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி ராம்! உங்கள் படங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு மிக மிக நன்றி! ஆனால் நீங்கள் கொடுத்த இணைப்பைத் திறந்து பார்க்க முடியவில்லையே? தரவிறக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ராம்? தானாக முன்வந்து படங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு பெரிய மனசு வேண்டும் ராம்! அதற்காகவே மீண்டும் என் நன்றி!

      Delete
  8. பறவை கவனித்தல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இரட்டைவால் குருவி என்று அறிந்து இருக்கிறேன். துறுதுறுன்னு இருக்கிற பறவைகள் கொள்ளை அழகு. தொடர்ந்து உங்களின் பறவைகளின் அணிவகுப்புக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் அக்கா.


    http://umayalgayathri.blogspot.com/2015/02/world-round-kavithai.html உலகம் உருண்டை தானே..? என்னுடைய பதிவு, நேரம் இருந்தால் காணவாருங்கள்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காயத்ரி! உங்களுக்கும் பறவையைக் கவனிப்பது மிகவும் பிடிக்கும் என்றறிய மகிழ்ச்சி. உங்களது இந்தப் பின்னூட்டம் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உற்சாகத்தைத் தருகிறது. நீங்கள் கொடுத்த இணைப்பைப் படித்து விரைவில் படித்துக் கருத்திடுவேன்.

      Delete
  9. வலியன், கரிக்குருவி, ரெட்டைவால் குருவி, வாலாட்டிக் குருவி, .... குருவி எனப்படும் இந்தக் கரிச்சானுக்குத் தான் எத்தனை பெரிய ரசிகர் வட்டம்!..

    வாழ்க கரிச்சான்!..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் துரை சார்! இந்தக் கரிச்சானுக்கு எத்தனை பெயர்கள்? இந்தப் பதிவின் மூலம் இதற்கு இத்தனை பெயர்கள் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. இக்குருவியைப் பற்றிப் பல்வேறு விபரங்கள் கொடுத்த உங்களுக்கு மீண்டும் என் நன்றி துரை சார்!

      Delete
  10. பறவைகளைக் கவனித்தல் நிச்சயம் சுவாரசியமானதுதான்.
    படைப்பாளிகள் எவரும் பறவைகளைத் தங்கள் படைப்பில் ( கதை, கவிதை, ஓவியம்...) விட்டுப்போனதாகத் தெரியவில்லை.

    பிறகு, போல ஒலியெழுப்புதல் என்று நீங்கள் சொல்வதோடு ஒத்த ஒரு வழக்கு “அநுகரணம் “ என்பது.
    இச்சொல் ஒரு சமஸ்கிருதச் சொல்லாக இருப்பினும் கூட, பத்து--- பதினொன்றாம் நூற்றாண்டில் எழுந்தாகக் கருதப்படும் யாப்பருங்கல விருத்தி எனும் தமிழ்நூலில் முதல் முதலில் சுட்டப்படுகிறது.

    ஒப்புப்போலி ஒலியெழுப்புதல் என்பது உங்களின் சொல்லாக்கமாய் இருந்தால்... நிச்சயம் நல்ல முயற்சி.

    வாழ்த்துகள்!

    த ம 4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்! உங்கள் முதல் வருகையைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
      உங்களை என் தளத்துக்கு அழைத்து வந்த கரிச்சானுக்குத் தான், நான் முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும்.

      நீங்கள் எழுதிய நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும், பூட்டின் சாவியும் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. வலைச்சரத்திலும் அதன் இணைப்புக் கொடுத்தேன். http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_31.html

      நீங்கள் சொல்வது போல், பறவைகள் இல்லாமல் அழகியலை அடிப்படையாகக் கொண்ட எந்தப் படைப்பும் முழுமை பெறாது.

      மிமிக்ரி என்பதற்கு அநுகரணம் என்ற சொல் இருப்பது உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி.
      ஒப்புப் போலி ஒலியெழுப்புதல் என்பது நான் மேலே குறிப்பிட்டிருக்கும், ‘பறவைகள் - அறிமுகக் கையேடு,’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் சொல். என்னுடைய ஆக்கமல்ல.

      இது மட்டுமின்றிப் பறவைகள் இடம் விட்டு இடம் பெயர்வதற்கு (MIGRATION) வலசை என்று அழகு தமிழில் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன் நான் இதைக் கேள்விப்பட்டது இல்லை.

      ஆனால் BIRD WATCHING என்பதற்கு, எல்லாவிடங்களிலும் பறவை பார்த்தல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். வெறுமனே பார்ப்பதற்கும், கூர்ந்து கவனிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? அதனால் நான் பறவை கவனித்தல் என்று சொன்னேன். இது சரியா?

      உங்களுக்கு மீண்டும் என் நன்றி. தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!


      Delete
    2. வணக்கம் சகோ!
      இந்த வலசை போதல் என்னும் சொல்லாட்சி, விலங்குகளும், குறிப்பாய் யானைகளின் இடப்பெயர்ச்சியையும் குறிக்கும்
      பழந்தமிழில் இடம்பெயர்வைக் குறித்தமைந்த சொல் இது என்று நினைக்கிறேன்.
      நீங்கள் குறிப்பிட்டுள்ள சூழலியல் ஆர்வலர்கள் பட்டியலில் “ ஓசை “ காளிதாஸ் அவர்களின் பெயரையும் சேர்க்கலாம் என்பது என் பரிந்துரை. கானுயிர் பற்றிய ஆய்வுகளையும் விழிப்புணர்வுகளையும் தரும்
      சிறந்த எழுத்தாளுமை அவர்.

      ஆம் நீங்கள் சொல்வதுபோலக் கவனித்தல் அல்லது கூர்நோக்கல் என்பது பார்த்தல் என்பதைப் பார்க்கிலும் சரியான ஆட்சி என்றே நினைக்கிறேன்.
      உங்களைப் போன்ற பல்துறை ஆர்வலர்கள் என்னைப் போன்று ஒற்றைத் தடத்தில் பயணிப்பவனையும் பார்த்துச் செல்லுதல் நான் செய்த பேறுதான்.
      மிக்க நன்றி.
      தங்களைத் தொடர்கிறேன்.

      Delete
    3. வணக்கம் சார்! தங்களை விஜி சார் என்றழைக்கலாமா?
      வலசை போதல் பழந்தமிழில் யானை இடப்பெயர்ச்சியைக் குறித்த சொல்லென்று அறிந்தேன்.
      கவனித்தல் என்பதை விடத் தாங்கள் சொன்ன கூர்நோக்கல் என்பது மிகப் பொருத்தமாய் எனக்குப் பட்டதால், என் பதிவின் தலைப்பைத் திருத்தி விட்டேன், நன்றி சார்!
      ஓசை காளிதாஸ் பற்றி உங்கள் மூலம் தான் அறிகிறேன். அவர் பதிவுகளை விரைவில் வாசிப்பேன்.

      “உங்களைப் போன்ற பல்துறை ஆர்வலர்கள் என்னைப் போன்று ஒற்றைத் தடத்தில் பயணிப்பவனையும் பார்த்துச் செல்லுதல் நான் செய்த பேறுதான்.”

      தன்னடக்கம் தேவை தான்; அதற்காக இப்படியா?
      தாங்கள் ஒற்றைத் தடத்தில் பயணிப்பதாக ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டாலும், அந்த ஒற்றைத் தடத்தை ஆழமாகவும் அகலமாகவும் கற்றறிந்து வைத்திருக்கிறீர்கள்;
      நாங்களோ பல தடங்களில் பயணிப்பதாக பேர் பண்ணி, எந்தத் தடத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
      நன்றி சார்!

      Delete
  11. இரட்டை வால்குருவி என்ற பெயர் மட்டும் நினைவில் உள்ளது. மாலை வேளைகளில் மின்கம்பிகளில் அமர்ந்திருக்கும் காட்சி மனம் அள்ளும். அது இது என்று இப்ப அறியும் மகிழ்ச்சி. அக்காஅக்கா என்று ஒரு குருவி.என்னைப் பாதித்தை சொல்கிறேன்.அருமை. மனம் நிறைந்த பாராட்டுகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி! அக்கா குருவி என்று ஒன்றிருக்கிறது. அக்குருவி உங்களைப் பாதித்த விதத்தை அவசியம் பகிர்ந்து கொள்ளூங்கள். அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். பாராட்டுக்கு மிகவும் நன்றி மகேஸ்வரி! தொடர்ந்து வந்து கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  12. கரிக்குருவி என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். எங்கு போனாலும் ஆட்டின் மேல், மாட்டின் மேல் உட்கார்ந்து சவாரி செய்யும். மின்சாரகம்பிகளில் உட்காரும். அதன் உடம்பு பள பள என்று கறுப்பாய் அழகாய் இருக்கும். நான் ஆடு, மாடு மேல் உடகார்ந்து இருக்கும் நிலையில் போட்டோ எடுத்து இருக்கிறேன். கதிர் அறுக்கும் எந்திரத்தின் முன் 10 ,15 சுற்றி சுற்றி பறந்து சுற்றிக் கொண்டு இருந்தது நான் ரயிலில் வரும் போது கடந்த வாரம், ஆனால் வெகு தூரத்தில் அந்த அற்புத காட்சி. படம் எடுக்க முடியாமல் போனது மிக வருத்தம். உங்களைப் போல் பறவைகளை கவனிப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. பற்வைகள் எல்லாம் உச்சாணி கொம்பில் இருக்க பிரியப்படும் அங்கு உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும். மரக்கிளையில் ஊஞ்சல் ஆடும் அது எனக்கு பிடித்த ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! உங்களுக்கும் பறவைகள் என்றால் உயிர் என்று நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட பறவைகள் படங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். உங்கள் ஊர் என்றால் மதுரையா? இலங்கையிலும் இதனைக் கரிக்குருவி என்றே சொல்வார்களாம். நீங்கள் சொல்வது போல் மாட்டின் மேல் அமர்ந்து பயணம் செய்வதை நானும் பலமுறை கண்டிருக்கிறேன். தொடர்ந்து வந்து உங்கள் அனுபவங்களை நானும் அறியத் தாருங்கள் கோமதி! மிகவும் நன்றி!

      Delete
  13. பறவைகளைப்பற்றிய பல செய்திகளை மிக அழகாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். பறவைகளைப் பார்த்து ரஸிக்காதவர்கள் அநேகமாக யாருமே இருக்க முடியாது. நானும் பல பறவைகளைப் பார்த்து ரஸிப்பது உண்டு. எனக்கும் அவற்றின் பெயர்களெல்லாம் அதிகமாகத் தெரிவதில்லை.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்! உங்கள் பதிவில் கடுமையான வேலைக்குப் பிறகு ஒரு வாரம் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இங்கு வந்து பார்த்தால் தொடர்ச்சியாகப் பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள். உங்கள் 'மேலிட'த்துக்குப் புகார் செய்வோம் என்று சொல்லியும் நீங்கள் அசர வில்லையே! மேலிட பயம் குறைந்து விட்டதா?

      Delete
  14. பறவைகளின் மேல் உள்ள தங்களின் ஆராய்ச்சி + தனி ஆர்வம் காரணமாக தங்களின் Profile Photo விலேயே ஓர் தங்க நிறப்பறவையை வைத்துள்ளது மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சார்! பறவைகள் என்றால் சிறுவயதிலிருந்தே எனக்குக் கொள்ளைப்பிரியம். அதனால் தான் மகன் எடுத்த படத்திலிருந்த தங்க மஞ்சள் பறவையின் படத்தை என் புரொபைலுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். மிகவும் நன்றி சார்!

      Delete
  15. //தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?//

    நிச்சயமாக ! இதைக்கூடத் தாங்கள் இங்கு தங்களின் எழுத்தினில் கொண்டு வந்துள்ளதை நான் வெகுவாக ரஸித்தேன்.

    மேலும் தொடர்ந்து பல பறவைகள் தங்களின் தளத்தினில் பறக்கப்போவது பற்றிய தங்களின் செய்தி அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் கரிச்சான் என்றாலும் கரிச்சான் குஞ்சு என்றாலும் பறவையை விடப் பலருக்கு இந்த எழுத்தாளர்கள் தாம் நினைவுக்கு வருவர். அதனால் அவர்கள் பெயரையும் இங்குக் குறிப்பிட்டு விட்டேன். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  16. கரிச்சான் பற்றிப் புதுத் தகவல்கள் அறிந்தேன் ; மிக்க நன்றி . இதற்கு ஆனைச்சாத்தன் என்றும் பெயருண்டு.
    ஆனைச்சாத்தன்
    கீச்சுக் கீச்சென்னும் பேச்சரவம் கேட்டிலையோ ?
    என எந்த இலக்கியத்தில் படித்தேன் என்பது நினைவீல்லை .
    காரைக்கால் வட்டாரத்தில் கருவாட்டுவாலி என்றுதான் சொல்வார்கள்.

    ReplyDelete
  17. இவ்வரிகள் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் இருப்பதாய்த் திரு துரை செல்வராஜூ அவர்கள் தம் பதிவில் எழுதியுள்ளார். இதற்கு ஆனைச்சாத்தன் என்ற பெயர் உள்ளது என்றும் அவர் எழுதியுள்ளார். கரிச்சானைப் பற்றி மேலும் சில தகவல்களை இவர் அளித்திருக்கிறார்:-
    இணைப்பு:- http://thanjavur14.blogspot.in/2015/03/1-drongo-.html
    சலீம் அலியின் புத்தகத்தில் கண்ட கருவெட்டு வாலி என்ற பெயர் தான் மருவி கருவாட்டு வாலியாகியிருக்க வேண்டும் என என் இரண்டாம் பதிவில் குறிப்பிடிருக்கிறேன். கரிக்குருவியின் தொடர்ச்சியைப் படிக்க:-
    இணைப்பு:- http://www.unjal.blogspot.com/2015/03/brid-watching-2_1.html
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  18. முதல் பிறந்த நாள் கொண்டாடும் குழலின்னிசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து! இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வலைப்பூ மென் மேலும் வளர்ந்து இன்னிசையை நாடு முழுக்கப் பரப்ப வாழ்த்துகிறேன்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  19. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  20. வலியன் என்ற பறவை பற்றி அறிய விரும்புகிறேன்.🙏

    ReplyDelete