நல்வரவு

வணக்கம் !

Thursday 23 April 2015

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி



தமிழ் இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் (1934 –2015) 08/04/2015 அன்று சென்னையில் காலமானார். 

இவர் மறைவுக்குத் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும், ‘எழுத்துலகச் சிற்பி,’  ‘சிறுகதை இலக்கியத்தின் முடிசூடா மன்னன்,’  ‘தமிழ் இலக்கிய ஒளிச்சுடர்,’  ‘படிக்காத மேதை,’  ‘முற்போக்குச் சிந்தனைவாதி,’  ‘தமிழ் இலக்கிய பிதாமகன்,’ என்றெல்லாம் புகழாரம் சூட்டிக் கண்ணீரஞ்சலி செலுத்தியுள்ளனர். 

கடலூரில் வேளாண்குடும்பத்தில் பிறந்து ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இலக்கியத்துக்கான மிக உயர்ந்த விருதான ஞானபீட பரிசு பெற்றதோடு, சாகித்ய அகாடமி, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.   
  
1950 களில் சரஸ்வதி, தாமரை, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.  அக்னிப் பிரவேசம், யுகசந்தி, உண்மை சுடும் போன்ற சிறுகதைகள், இவரைப் புதுமைப்பித்தனின் வாரிசாக அடையாளம் காட்டின.  சாகித்ய அகாடெமி விருது பெற்றுத் தந்த, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ நாவல் தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது. 

‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,’ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,’ ‘யாருக்காக அழுதான்,’ ‘உன்னைப் போல் ஒருவன்,’ போன்றவை, காலத்தை வென்று நிற்கும் இலக்கியப் படைப்புக்கள்.  எழுத்துலகில் மட்டுமின்றி, திரையுலகம், அரசியல் எனப் பல தளங்களிலும் தம் முத்திரையைப் பதித்தவர் ஜெயகாந்தன்.


வணிக இதழ்களில் கூட இலக்கியத் தரமான கதைகளை எழுத முடியும் என்பதை மெய்ப்பித்தவர்.  விகடனில் ‘அக்னி பிரவேசம்,’ சிறுகதை வெளி வந்த போது, அதற்கு வாசகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இக்கதையில் கல்லூரியில் படிக்கும் பெண்,  தன் பெண்மையைப் பறிகொடுத்து வந்து நின்று அழும் நேரத்தில் தாய் அவள் தலையில் தண்ணீரைக் கொட்டிச் சொல்லும் வசனம் இது:-

“நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ? அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு.”

இக்கதையின் எதிர்வினை பற்றி ஜெயகாந்தன் கூறுவதைக் கேளுங்கள்:-  “என் கதையின் முடிவை மாற்றியும், அந்தக் கதாபாத்திரத்தைக் கொன்றும் அதே தலைப்பில் கதை எழுதித் தமிழ்நாட்டின் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றுக்கு ஊக்கம் தந்து, நடந்த அத்துமீறல்களைச் சகித்துக் கொண்டிருந்தேன்.  எழுதுகிற பணிக்குப் பொறுமை மிக மிக இன்றியமையாதது.  நான் ஒரு நாவலே எழுதுவதற்கு அந்த அத்துமீறல்களும், எனது அக்னிபிரவேசமும் காரணமாதலால், அவர்களுக்கும் கூட நான் நன்றி பாராட்டுகிறேன்.”

அக்னி பிரவேசத்தின் கதையின் முடிவை மாற்றிச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்,’ நாவலை அவர் எழுதினார்.  இக்கதையில் அதே போலப் பெண்மையைப் பறிகொடுத்து விட்டு வந்து பெண் நிற்கும் போது, சத்தம் போட்டு ஊரைக்கூட்டி எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக்கிவிடும் தாயால்  அப்பெண்ணின் வாழ்வு எவ்வளவு சீரழிந்து போகிறது என்பதை அருமையாக விளக்கியிருப்பார். 

இந்நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது.  கங்கா பாத்திரத்தில் நடிகை லட்சுமி அற்புதமாக நடித்திருப்பார்.  இந்நாவலின் தொடர்ச்சியாகக் ‘கங்கை எங்கே போகிறாள்?’ என்ற தொடர்கதையை எழுதினார். 

எழுதியவற்றுள் தமக்கு மிகவும் பிடித்ததாக ஜெயகாந்தன் சுட்டியது ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’.  இக்கதை நாயகன் ஹென்றி  ஊர், மொழி, இனம் கடந்த ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்,’ என்ற உயரிய் மனப்பான்மை கொண்ட உலகப் பொது மனிதனாக  உருவாக்கப்பட்டிருக்கிறான்.   ’என் உள்ளம் தான் ஹென்றி,’ என்று இவர் ஒரு நேர்காணலில் கூறினாராம். 

இரண்டாம் உலகப்போரின் போது சபாபதிப்பிள்ளை, மைக்கேல் அவரது மனைவி மூவரும் ரங்கூனிலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடி வரும் வழியில், ரயில் நிலையத்தில் அநாதைக் குழந்தையாகக் கண்டெடுக்கப் படுகிறான் ஹென்றி. 

தன் வளர்ப்புத் தந்தையின் மறைவுக்குப் பின் பெங்களூரிலிருந்து அவரது கிராமமான கிருஷ்ணராஜபுரத்துக்கு  வருகிறான். இவ்வூரின் வாழ்க்கை சூழலே நாவலின் பின்னணியாக அமைந்துள்ளது.
 

அவ்வூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் தேவராஜன் என்பவனுடன் நட்பு ஏற்படுகிறது. தன் கிராமத்துப் பழக்க வழக்கங்களில் அதிருப்தியும் வெட்கமும் கொள்கிறவனாகவும், அச்சூழலில் அந்நியப்பட்டும் வாழ்கிறான் இவன்.

ஆனால் எங்கோ பிறந்து பெங்களூரில் வளர்ந்த ஹென்றி, தன் வளர்ப்புத் தந்தையின் கிராமத்துக்கு வந்து, அந்த வாழ்க்கையை அதன் இயல்புகளோடு ஏற்றுக்கொண்டு கிராமச் சூழலோடு ஒன்றிப் போகிறான்.  அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

ஜெயகாந்தன் என்பது ஒற்றைச் சொல்லில் ஒரு சரித்திரம்; இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம் என்கிறார் கவிஞர் வைரமுத்து. . 

இவர் எழுத்துக்களை வாசிப்பதே, நாம் இவருக்குச் செய்யும் மரியாதை.   தமிழ் இலக்கிய வரலாற்றில் என்றென்றும் இவருக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. .

(‘நான்கு பெண்கள்' தளத்தில் 13/04/2015 அன்று வெளியானது)

(படம் நன்றி இணையம்)                                      

Sunday 12 April 2015

பறவை கூர்நோக்கல் - 4 - மைனா

மைனா 


தமிழகத்தில் பரவலாகக் காணப்படுவதால், எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பறவை மைனா - MYNA (STARLING) (Acridotheres tristis).

மைனா (Mynah) என்ற ஹிந்தி பெயரின் மூலம் சம்ஸ்கிருதம்(Madana).  நாகணவாய்ப்புள் என்ற பெயரில், நம் இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பறவை இதுவே.       

இதன் உடல் காப்பிக்கொட்டை நிறம்; தலை கறுப்பு; கண்ணைச் சுற்றி மஞ்சளாகவும், வாலுக்கடியில் வெண்மையாயும் இருக்கும்.  புறா, காகம், சிட்டுக்குருவி போல, மனிதர்கள் வசிக்குமிடங்களில் வாழும்.  காலத்துக்கேற்றாற் போல் கிராமங்களில் மட்டுமின்றி, பெரிய நகரங்களிலும் வாழ்வதற்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பறவை.      

பூச்சி, புழு, பழம், தேன் என எல்லாமும் தின்பதால், இது ஓர் அனைத்துண்ணி.

மரப்பொந்து, கட்டிட ஓட்டைகள், பாறை இடுக்குகள் ஆகியவற்றில் கூடு கட்டும்.  பழைய தாள், வைக்கோல், துணி ஆகியவை இவை கூடுகட்டப் பயன்படுத்தும் பொருட்கள். 

ஆஸ்திரேலியாவில் தெரியாத்தனமாய் இதனை அறிமுகப்படுத்தப் போய், அசுர வேகத்தில் வளர்ந்து, அக்கண்டத்தையே நடுங்க வைத்துள்ளதாம்.  அங்குள்ள உள்ளூர் பறவையினங்களை ஒடுக்கிவிட்டு, குறுகிய காலத்தில் பன்மடங்கு பெருகி ஆக்கிரமிப்பு நடத்தும் அழிவு சக்திகளில் மிக முக்கிய இடத்தை இது பெற்றிருக்கிறது. 
நம்மூரில் கரிச்சான், கழுகு, பருந்து போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால், இதன் ஜம்பம் இங்குப் பலிக்கவில்லை போலும்!  ஒண்டப்போன ஆஸ்திரேலியாவில் இது ஆக்கிரமிப்பு நடத்தும் விதத்தைச் சுவாரசியமாகப் பகிர்ந்திருக்கிறார் கீதா, ஒண்ட வந்த பிடாரிகள் - மைனாக்கள் என்ற இக்கட்டுரையில்.  

தென்னிந்தியாவில் ஏழு வகை மைனாக்கள் இருக்கின்றனவாம்.       

கருந்தலை மைனா (Brahminy Starling)


உச்சந்தலை, பிடரி கறுப்பாகவும் வயிறும் நெஞ்சும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.  பெரும்பாலும் ஜோடியாகவே காட்சி தருகின்றது.  

எதிர் வீட்டு மாடியில் இரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கிறது.  யாருக்கும் இதன் பெயர் தெரியவில்லை.  ஜெகநாதன் எழுதிய பறவைகள் அறிமுகக் கையேட்டில் இடம் பெற்றுள்ள படம் மூலம் இதை அறிந்துகொண்டேன். 

இது குடித்தனம் நடத்தும் இடம் எது தெரியுமா?  சிருஷ்டி கழிக்க வைப்பார்கள் அல்லவா பொம்மை, அதனுள் தான். 


பொம்மையின் கொம்புகள் இரண்டும் உடைந்துவிட, அதனைத் தம் வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்து விட்டது.  எனவே உயரமான கட்டிடங்களில் வைக்கும் திருஷ்டி பொம்மையின் கொம்புகளை மட்டும் உடைத்து வைத்து விட்டால், திருஷ்டியும் கழியும்; ஒரு பறவை குடும்பத்துக்கு வாழ்விடம் கொடுத்த புண்ணியமும் கிடைக்கும்!     

நன்றி:- பறவைகள் அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை
முதல் மைனா படம் – நன்றி இணையம்    

Wednesday 1 April 2015

சிட்டுக்குருவியை அழிவிலிருந்து மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கூடு தயார்!
(நான்கு பெண்கள் தளத்தில் 23/03/2015 அன்று வெளியான கட்டுரை)

1.   மரம், மூங்கில், அல்லது  மண் கலயம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றாலான கூடு செய்து வாயில் முகப்பிலோ  (Portico), ஜன்னல் பக்கத்திலோ தொங்க விடுங்கள்;  காலணி, காம்பளான் அட்டைப் பெட்டிகளின் நடுவில் 32 மி.மீ அளவு ஓட்டை போடுங்கள்;  பெரிய ஓட்டையாக இருந்தால் காகம் போன்ற பெரிய பறவைகள், அதன் வழியே அலகை விட்டுக் குஞ்சுகளைத் தின்றுவிடக்கூடும். 
 
கூட்டுக்குள் குருவி! 
(நான் ‘சர்ப் எக்செல்’ பெட்டிகளைப் பயன்படுத்துகிறேன்.  நன்கு திறந்து வைத்து சோப் வாசனை முற்றிலும் நீங்கிய பிறகு பயன்படுத்தவும்.)
குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறந்த பிறகு, பழைய அட்டைப் பெட்டியைக் கழற்றிவிட்டுப் புதிதாக மாட்டவும்.   ஓரிரு நாட்களில் அடுத்த ஜோடி வந்துவிடும் குடித்தனம் நடத்த!  கூட்டுக்கு அவ்வளவு கிராக்கி!
வைக்கோல் இருந்தால் அட்டைப் பெட்டியில் கொஞ்சம் போட்டுவைக்கலாம்; இல்லையேல் வெறுமனே வைத்தால் போதும்.
பழைய பூந்துடைப்பான்களைத் தூக்கிக் குப்பையில் எறியாமல்  ஏதாவது ஓர் இடத்தில் போட்டு வைக்கவும்; அவற்றிலிருந்து மிருதுவான பஞ்சு போன்ற நார்களை உருவி எடுப்பதில் சிட்டுக்குருவி கெட்டி!
 
அடை காக்கும் குருவி
2.   கூட்டுக்கு அடுத்துத் தேவை உணவு.  கம்பு, கேழ்வரகு, அரிசி நொய், போன்ற தானியங்களை உணவளிப்பான் (Bird Feeder) மூலம் போடலாம்.   தட்டில் போட்டும் வைக்கலாம்.  குஞ்சு பொரித்திருக்கும் போது சுடு சாதத்தை மோரோ, பாலோ ஊற்றிக் குழைவாகப் பிசைந்து வைக்கலாம். 
    

3.   மூன்றாவது மிக முக்கியம் தண்ணீர்.  இரண்டு அதிக ஆழமில்லாத மண்சட்டிகளை வாங்கித் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.  ஒன்று குடிப்பதற்கு; இன்னொன்று குளிப்பதற்கு.  தினமும் நீரை மாற்றுவது அவசியம்.

4.   இப்போது எங்குப்பார்த்தாலும் புல்தரை (LAWN) வளர்ப்பது நாகரிகமாயிருக்கிறது.  பறவைகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ  அண்டாத இந்தப் புல்தரைக்குப் பதில் வீட்டைச் சுற்றிச் சிறிதளவே மண் இருந்தாலும் முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, இட்லிப்பூ, அரளி போன்ற செடி, கொடி வகைகளை வளருங்கள்.  பெரிய தோட்டமாயிருந்தால் பழ மரங்களை வளர்க்கலாம்.  சிட்டுக்குருவிக்கு மட்டுமின்றி, மற்ற சிறு பறவைகளுக்கும் புதர்ச்செடிகள் அவசியம். 

5.   தோட்டத்தில் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தவே கூடாது.

6.   கல் மாவுக்குப் பதில் அரிசிமாவைக் கோலத்துக்குப் பயன்படுத்துங்கள்.

7.   கூட்டுக்கு அருகிலோ, கீழேயோ நின்று சத்தம் போடக்கூடாது. பட்டாசு வெடிச்சத்தம் கூடவே கூடாது.
 
காலியான கூடு!
குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச் சுற்றியவுடன், அடி வயிற்றைத்  தொட்டுப் பார்த்த கதையாகக் கூட்டைக் கட்டியவுடனே, குருவி வந்து கூடு கட்டும் என எதிர்பார்க்கக் கூடாது.  சில நாட்கள் ஆகலாம்; மாதங்களும் ஆகலாம்.
ஆனால் ஒரு முறை சிட்டுக்குருவி கூடு கட்டத் துவங்கிவிட்டால், அதற்குப் பிறகு வரிசையாக அடுத்தடுத்த ஜோடி வந்து கொண்டே இருக்கும்.

எங்கள் தெருவில் முதலில் நான்கு சிட்டுக்குருவிகள் மட்டுமே இருந்தன.  இப்போது இருபதுக்கும் மேற்பட்ட குருவிகள் உள்ளன.  எனவே நாம் மனது வைத்தால் கண்டிப்பாக குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்க முடியும் என்பது என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை. 

தெருத்தெருவாகச் சுற்றியலைந்து கூடு கட்டத் தோதான இடத்தைக் கண்டுபிடிப்பது ஆண்குருவியின் வேலை.  இடம் கிடைத்தவுடன் இது என் இடம்; இங்கு வேறு யாரும் வரக்கூடாது என்று நான்கெல்லை வகுத்துக்கொண்டு பெண்குருவியைக் கவர அதிகச் சத்தத்துடன் ஒலியெழுப்புமாம். 

பெண்ணுக்கு ஆண் பார்த்த இடம் பிடித்திருந்தால், ஜோடி சேரும்.  தம்பதி சமேதரராக இரண்டும் சேர்ந்து கூட்டுக்கான பொருட்களைச் சேகரம் செய்யும்.  ‘இது என் வேலையில்லை;  நீதான் செய்யணும்,’ என்ற போட்டாப் போட்டி இக்குருவி இனத்தில் இல்லை!     

“க்கும்! ரொம்ப யச்சனமா இடம் பார்த்திருக்கு பாரு!” என்று பெண்குருவி  ஆணின் முகத்தில் காறித் துப்பிவிட்டுப் போய் விட்டால், அதனைக் கவர ஆண் வேறு இடம் தேட வேண்டும்!  இல்லாவிட்டால் இந்தக் கூட்டுக்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண் கிடைக்கும் வரைப் பொறுத்திருக்க வேண்டும்! 

ஆனால் இக்காலத்தில் கூடு கட்ட ஏதாவது இடம் கிடைத்தால் போதும் என்ற பரிதாபமான சூழ்நிலையில், பெண்குருவி ஆண் தேர்ந்தெடுக்கும் இடத்தை நிராகரிக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு தான்.   
 
கூட்டினுள் இருந்தவை
சிட்டுக்குருவி தினம் பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய ‘நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,’ (SAVE OUR SPARROWS)  (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.  புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார்.  இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:-  http://www.natureforever.org/  

வேளாண்மை விளைச்சலுக்குச் சிட்டுக்குருவி எவ்வளவு தூரம் உதவுகிறது  என்பதை இவர் சொல்லும் சீனாவின் வரலாற்று நிகழ்விலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்:- 

1957 ஆம் ஆண்டு வேளாண் அறுவடை மோசமாகப் பாதிக்கப்பட்டதற்கு  எலி, சிட்டுக்குருவி, ஈ, கொசு ஆகியவற்றைக் காரணம் காட்டிய சீன அதிபர் மாசே துங்,  1.96 பில்லியன் குருவிகளைக் கொல்லுமாறு உத்தரவிட்டார். 

சிட்டுக்குருவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, விளைச்சலுக்கு உதவி செய்கிறது என்று பறவையியலார் கடுமையாக  எச்சரித்தும், அவர் கேட்கவில்லை.   இவர் ஆணைப்படி 1958 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அநியாயமாக 194,432 அப்பாவிக் குருவிகள்  கொல்லப்பட்டன.
ஆனால் அதற்கடுத்த ஆண்டு பூச்சிகளின் கடுமையான தாக்குதலால் விளைச்சல் படு மோசமாகப்  பாதிக்கப்பட்டதோடு, 1960 -62 ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்துக்கு 40000 சீனர்கள் பலியாயினர்.

சரி, நண்பர்களே!  உங்களுக்குக் கடைசியாக ஒரு வேண்டுகோள்!
சிட்டுக்குருவிகளைப்  பாதுகாக்க வேண்டிய  அவசியத்தைக் குழந்தைகளுக்கும் இளைய தலைமுறைக்கும்  எடுத்துக் கூறி,  இயற்கையை  நேசிக்கக் கற்றுக் கொடுங்கள்.
இக்கட்டுரையை வாசித்த ஒவ்வொருவரும் இன்று முதல் சிட்டுக்குருவியைக் காக்கும் நடவடிக்கையில் இறங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.  கட்டுரையைப் பொறுமையாக வாசித்தமைக்கு என் நன்றி.