நல்வரவு

வணக்கம் !

Friday 27 February 2015

பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) – 1 - கரிச்சான்


நான் ஒரு பறவை பிரியை.  சிறு வயது முதலே பறவைகளைக் கூர்ந்து கவனிப்பது (BIRD WATCHING) மிகவும் பிடித்தமான செயல். 

நம் மண்ணில் வாழும் பறவைகளைப் பற்றி, முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற வருத்தம், பல ஆண்டுகளாக இருந்தது.

அக்கம் பக்கத்தில் புதிதாகப் பார்க்கும் பறவையின் சரியான பெயர் கூடத் தெரியவில்லை; ஆளாளுக்கு ஒரு பெயர் சொல்வதால் எது சரி, எது தவறு? என்பதில் குழப்பம்.

தமிழில், ஆங்கிலத்தில் இருப்பதைப் போலப் பறவைகளைப் பற்றிய தரமான புத்தகங்களும் இல்லை.   
    
இச்சூழ்நிலையில் ப.ஜெகநாதன் & ஆசை எழுதி க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பறவைகள் அறிமுகக் கையேடு,' என்ற புத்தகம், என் நீண்ட நாள் ஆசையைப் பூர்த்தி செய்து, என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துள்ளது. 

நம்மூரில் பரவலாகக் காணப்படும் 88 பறவைகள் பற்றிய விளக்கத்தைப் புகைப்பட கலைஞர்கள் எடுத்த நேர்த்தியான 166  வண்ணப் படங்களுடனும், அவற்றைப் பற்றிய சிறு குறிப்புடனும் கொடுத்திருப்பது இக்கையேட்டின் சிறப்பு.

பறவை கவனிப்பின் (BIRD WATCHING) அவசியம் பற்றியும், அதில் ஈடுபடுவோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் இது எடுத்துரைக்கிறது. 
தமிழகப் பறவைகள் குறித்த ஆய்வுக்கு உதவக்கூடிய வகையில் பறவையின் பெயர், அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பெயர், அதன் குடும்பம், வாழ்விடம், அதன் சிறப்புக்கள் போன்ற விபரங்களும் இதில் உள்ளன. 

இதில் இருந்த படங்களைப் பார்த்த பின், நான் ஏற்கெனவே பார்த்திருந்த சில பறவைகளின் சரியான பெயர்களை அறிந்து கொண்டேன். 

நான் கவனித்த பறவைகள் பற்றிய விபரங்களை, இக்கையேட்டின் உதவியோடு சரியாக அடையாளங் கண்டு, இத்தொடரில் அவ்வப்போது பகிர எண்ணியுள்ளேன்.

இப்பதிவை வாசிப்பவர்கள், பறவைகளைச் சுலபமாக அடையாளங் காண படங்களை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட இருக்கிறேன்.  (நான் அலைபேசியில் எடுக்கும் படங்கள், அவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்)  
  
பதிவை வாசிக்கும் நண்பர்கள், தங்கள் பகுதியில் இப்பறவைக்கு வேறு பெயர்கள் இருந்தாலோ, இதனைப் பற்றி வேறு விபரங்கள் தெரிந்தாலோ அவசியம் பின்னூட்டமிட்டு, அதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

பின்னாளில் நம் பறவைகள் குறித்த ஆய்வுக்கு, அது உதவி செய்யும் என்பதால் தான் இந்த வேண்டுகோள்!

முதலாவதாக அண்மையில் நான் பார்த்த கரிச்சான்.  (BLACK DRONGO)



கரிச்சான் என்றவுடன் உங்களுக்குப் புகழ் பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் நினைவுக்கு வருகிறாரா?

ஆம்.  கு.ப.ரா.வின் புனைபெயர்களுள் ஒன்று ‘கரிச்சான்,’. 

கு.ப.ராவின் எழுத்தால் கவரப்பட்ட எழுத்தாளர் நாராயணசாமி, ‘கரிச்சான் குஞ்சு,’ என்ற புனைபெயரில் எழுதினார்.  இவர் எழுதிய ‘பசித்த மானுடம்,’ புதினம் மிகவும் புகழ் பெற்றது.

பறவையைப் பற்றிச் சொல்லாமல், எழுத்தாளரைப் பற்றிச் சொல்வதும்  ஒரு காரணமாகத் தான்.   

தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?

கரிச்சானை ஏற்கெனவே பல முறை பேருந்தில் பயணம் செய்யும் போது, பார்த்திருக்கிறேன்.  மின்சார கம்பிகளில் ஒய்யாரமாக அமர்ந்து ஊஞ்சல் ஆடியபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 

இதற்கு இரட்டை வால்குருவி என்ற பெயரும் உண்டு.   வாலில் ஒரு பிளவு இருப்பதால், இப்பெயர் வந்திருக்கலாம். 

இது கடந்த வாரம் முதன் முறையாக, எங்கள் தோட்டத்தின் பின்பக்கம் ஒரு கம்பின் மேல் வந்து அமர்ந்தது.  சிறிது நேரத்துக்கொரு முறை பிரகாரம் சுற்றுவது போல், கம்பை வட்டமிட்டுப் பறப்பதும், பின் அதே இடத்தில் வந்து அமர்வதுமாக இருந்தது. குறைந்தது பத்து தடவை களாவது இவ்வாறு செய்திருக்கும்.  பின் மேலெழும்பி பறந்து மறைந்து விட்டது. 

இப்பறவை பற்றிக் கையேட்டிலும், இணையத்திலும் திரட்டிய சுவையான தகவல்கள்:-

இது சமயத்தில் வல்லூறு (SHIKRA) போலக் குரல் கொடுத்து,  மைனா போன்ற பறவைகளைப் பயமுறுத்தி ஓட்டி விட்டு, அதன் இரையைப் பிடுங்கித் தின்னும் இயல்புடையது. 

இது அடைகாக்கும் காலத்தில் தனக்கென்று ஒரு எல்லை வகுத்துக் கொண்டு, குஞ்சுகளை அபகரிக்கக் கூடிய காக்கா போன்ற பெரிய பறவைகளைத் தன் எல்லைக்குள் வராதவாறு விரட்டியடித்து விடுமாம்.  எனவே இதற்கு ராஜ காகம் என்ற பெயரும் உண்டு (KING CROW).

எனவே இது அடைகாக்கும் காலத்தில் கொண்டைக்குருவி (RED VENTED BUL BUL) போன்ற சிறு பறவைகள், கரிச்சானைக் காவல் தெய்வமாகக் கொண்டு, இதன் எல்லைக்குள் தைரியமாகக் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்குமாம்.    

பிற பறவைகளைப் போலவே ஒலியெழுப்புவதற்கு ஒப்புப்போலி ஒலியெழுப்புதல் (MIMICRY) என்று பெயர். 

இதனைக் கருவாட்டு வாலி என்றும் சிலர் சொல்கின்றனர். மேலே குறிப்பிட்ட கையேட்டில், இந்தப் பெயர் கொடுக்கப்படவில்லை யென்பதால், இதனை இப்படியும் அழைக்கலாமா எனச் சரியாகத் தெரியவில்லை.  

வாசிக்கும் அன்பர்களுக்குத் தெரிந்தால் அவசியம் சொல்லுங்கள்.                                
 (கரிச்சான் படம் - இணையத்திற்கு நன்றி)

Wednesday 25 February 2015

என் பார்வையில் – ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்,’ – கவிதைகள்

       என் பார்வையில் – ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்,’ –                ஆசிரியர்:-  உமா மோகன்
       வெளியீடு:அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம்.                          முதல் பதிப்பு:- டிசம்பர் 2014
       இவரது பிற நூல்கள்:- டார்வின் படிக்காத குருவி – கவிதை              வெயில் புராணம் -  பயண அனுபவத்தொகுப்பு

இந்நூலில் நான் ரசித்த, என்னைப் பாதித்த கவிதைகள் பற்றி, உங்களோடு பகிர்ந்து கொள்ளவே, இப்பதிவு.

Thursday 19 February 2015

என் பார்வையில் - 'அன்னபட்சி' - கவிதைகள்

‘அன்ன பட்சி’ - கவிதைகள்
ஆசிரியர்:- தேனம்மை லெஷ்மணன்
இவரது வலைப்பூ:- சும்மா
முதல் பதிப்பு:- ஜனவரி 2014
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம் கைபேசி:- 9994541010
இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  ஏற்கெனவே ‘ங்கா’ என்ற தொகுப்பு வெளிவந்துள்ளது. 

Thursday 12 February 2015

என் பார்வையில் - என்றாவது ஒரு நாள் - ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்



ஹென்றி லாசன் (HENRY LAWSON - 1867- 1922) எழுதிய ஆஸ்திரேலிய காடுறை மாந்தர் கதைகளின் மொழியாக்கம் கீதா மதிவாணன்.
இவரது வலைப்பூ:-  கீதமஞ்சரி
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம். கைபேசி:- 9994541010
முதற்பதிப்பு:- டிசம்பர் 2014
விலை:- ரூ 150/-

Sunday 1 February 2015

வலைச்சரம் - ஏழாம் நாள் - பதிவர் புத்தகங்கள் - சிறு அறிமுகம்

இப்புத்தாண்டில் என் நூலகக் காட்டில் அடைமழை!

அன்பளிப்பாக பெற்ற நூல்கள் சில!  புத்தகக் காட்சியில் வாங்கியவை பல.

என் அலமாரியில் புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய பதிவின் நோக்கம்.

முழுமையாக வாசித்த பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.

தம் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச் செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டியே இப்பதிவு.

வலைச்சரம் - ஆறாம் நாள் - பல்சுவை விருந்து

வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை,  நான் தேர்வு செய்த தலைப்புக்களில் அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:- 

1  எம்.ஏ.சுசீலாவின் தப்பவிடக்கூடாத சிறுகதைகள் தொகுப்பிலிருந்து மிகவும் பிடித்த ஒன்று:-
கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்

2.  வீட்டின் மூலையில் ஒரு சமையலறை-  அம்பை அழியாச்சுடர்கள் தொகுப்பிலிருந்து.


3.  பெண்மை வாழ்கவென்று - சிறுகதை -  ஜீ.ஜீ  -  பூவனம்
 தன்னில் தன்னைக் காண்பது- தமக்குள் பார்வையைச் செலுத்திக் கறாராகத் தம்மைச்  சுயவிமர்சனம் செய்து மேம்படுத்திக்கொள்ள விழைவோருக்கான சுய தேடல் பதிவுகள்.  

4.  சிவப்பி  -  சிறுகதை கீதா மதிவாணன் - கீதமஞ்சரி 
(இவர் கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்தது)

5. மரணத்துள் வாழ்பவர்கள் – கவிதை - ஹேமா- வானம் வெளித்த பின்னும் (மனதைத் தொட்ட பதிவு)

6.  வன்மம் தவிர்-  கவிதை - நிலாமகள் – பறத்தல்- பறத்தல் நிமித்தம்


7. வில்விசை வித்தையிலே-  மகேந்திரன் -  வசந்த மண்டபம் (அழிந்து வரும் தமிழர் கலையைப் பற்றிய அருமையான பதிவு)

8. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் -  வை.கோபாலகிருஷ்ணன்
சுவையான பள்ளி நினைவலைகள் (பள்ளிக்கூடம் பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு) 

9.  பேந்தா, கொந்தம், முக்குழி -  சிறுவயது விளையாட்டுக்கள் பற்றிய பதிவு – இலக்கியச்சாரல் – சொ.ஞானசம்பந்தன் (தமிழர் விளையாட்டு பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு)

10. தஞ்சை பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் –முனைவர் ஜம்புலிங்கம் (சோழர் ஓவியம் குறித்த புரிதலுக்குப் பயன்படும் கட்டுரை )


10.  எஸ் ராமகிருஷ்ணன் - இன்னொரு பயணம்  -  போலிஷ் திரைப்படம் இடாவின் விமர்சனம். 

11.  ஜெர்மன் ஓவியர் காஸ்பர் டேவிட் பிரெடரிக் வரைந்த ஓவியம் நிலாபார்ப்பவர்கள் பற்றிய பதிவு. 

12.  முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே -  தந்தை மகளுக்கு எழுதிய கடிதம் (என்னை மிகவும் கவர்ந்த ஒன்று)  நா.முத்துநிலவன்.- வளரும் கவிதை (கல்வியாளர்களும், பெற்றோர்களும், இளந்தலைமுறையினரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கடித இலக்கியம்)  தொடர்ந்து வாசிக்க...

வலைச்சரம் - ஐந்தாம் நாள் - வேருக்கு நீர் ஊற்றுவோம்!

தமிழின் பேச்சுவழக்கில் அறுபது சதவீதத்துக்கு மேல் பிற மொழிகளின் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகின் அழிவின் பாதையில் இருக்கக் கூடிய  மொழிப் பட்டியலில் நம் தமிழும் இருப்பதாகவும், உலகின் மொழி ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்தைஒப்புக்கொண்டே ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.

என்ன ஆச்சரியம்!  என் மனத்துயரை அப்படியே படம் பிடித்தாற் போல் வெளிப்படுத்துகிறதுஎனது மனவெளியில் வேதாவின் வலையில் இடம் பெற்றுள்ள நூலறுந்த பட்டமென ஆகுமோ? என்ற கவிதை. அதிலிருந்து சில வரிகள்:- 

“நூலறுந்த பட்டமென ஆகுமோ தமிழ்
பட்டுத் தமிழ் அழியுமோவென்று ஆய்வுகள்
ஒட்டிய கிலியால் மனவுளைச்சல்”

பாமரர்களின் பேச்சில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஆங்கிலக் கலப்பு மிக அதிகமாக உள்ளது.  எங்கும் எதிலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது.

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான், சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்லகூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்ல வெயிட்பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்.  ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணிசெட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     

பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 

“வண்டிக்காரன் கேட்டான், லெப்டா ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?” (காசி ஆனந்தன்)தொடர்ந்து வாசிக்க...

வலைச்சரம் - நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே'

மங்கையராய்ப் பிறப்பதற்கு 
மாபாவம் செய்திருக்க வேண்டும்!


பெண்சிசுக்கொலை, பெண்கள் & குழந்தைகள் வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு போன்ற கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகி வரும் இக்காலத்தில் மங்கையராய்ப் பிறப்பதற்கு, மாதவமா செய்திருக்க வேண்டும்?

தாய்மையைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இந்நாட்டில், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்தி, இடம் பெறாத நாளேடுகளே இல்லை என்றாகி விட்டது இன்றைக்கு. 


இக்கொடுமை தற்போது 792 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பெண்ணியம் இணைய இதழின் கட்டுரை சொல்லும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.  


பாலியல் கொடுமைகள் முன்பும் நடந்து கொண்டு தானிருந்தது.  ஆனால் அவை வெளிச்சத்துக்கு வரவில்லை. இப்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக, அதிகளவில் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன; என்று சிலர் வாதிட்டாலும், இன்றுங்கூட எல்லாக் குற்றங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்பது தான் உண்மை.  

வலைச்சரம் - மூன்றாம் நாள் - இயற்கையோடியைந்து வாழ்வோம்

இயற்கையை நேசிப்போம்!
இயற்கையோடியைந்து வாழ்வோம்!

விடிந்தும் விடியாத கருக்கலில், பனித்துளி முத்துக்கள் பட்டுச் சிலிர்த்து நின்று, விரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன், ஒன்றிரண்டு இதழ்களை மட்டும் மெல்ல அவிழ்த்து, ஒரு பக்க அழகைக் காட்டும் ரோஜாவின் தரிசனம் கிடைத்துப் பரவசப்பட்டதுண்டா நீங்கள்?

ஆங்காங்கே வைர மணிகள் ஜொலிக்க, ஆரஞ்சுக் கம்பளம் விரித்துக் கதிரவனைத் தினந்தினம் வரவேற்கத் தயாராகும், கீழ்வானைக் கண்டு சிலிர்த்ததுண்டா என்றாவது?

அதிகாலையிலும், அந்திமாலையிலும் புள்ளினங்களின் ஒருங்கிணைந்த இனிய கானம் செவிமடுத்து மெய்மறந்ததுண்டா?  

குட்டிக் குட்டி அலகுகளில் ஓயாமல் நாள் முழுக்க குஞ்சுக்கு இரை எடுத்து வந்து ஊட்டும் தாய்மையின் சிறப்பு கண்டு அதிசயித்ததுண்டா? தொடர்ந்து வாசிக்க...

வலைச்சரம் - இரண்டாம் நாள் - வாய்விட்டுச் சிரித்தால்!

எல்லோருக்கும் வணக்கம். 

இந்நூற்றாண்டில் வயது வித்தியாசமின்றி, அனைவரையும் பாதிக்கும் ஒரு நோய் மனஅழுத்தமே. 

இந்நோயால் மனநலமும், உடல்நலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு,  மனச்சோர்வு(Depression) ஏற்படுவதுடன், இதயத்தாக்கு, அதிக இரத்த அழுத்தம் போன்ற உயிருக்கு ஆபத்தான வியாதிகளும் உண்டாகின்றன.

கால் நூற்றாண்டுக்கு முன் மனஅழுத்தம், மனச்சோர்வு, மனச்சிதைவு போன்ற  உளவியல் கோளாறுகளைப் பற்றிய விழிப்புணர்வு, நம்மிடம் அறவே இல்லை.  அக்காலத்தில் மனநோய் என்றாலே பைத்தியம் தான்.  அதற்குச் சரியான வைத்தியமும் கிடையாது.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.  இன்று குழந்தைகள்  முதல் முதியவர் வரை, அவர்களுக்கேற்படும் பல்வேறு மனக்கோளாறுகளுக்கு இத்துறை சார்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை கேட்பதும், சிகிச்சை பெறுவதும் சாதாரண விஷயமாகிவிட்டது.

இன்றைய வாழ்க்கை சூழலில், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த மன அழுத்தத்துக்கும், மனத்தளர்ச்சிக்கும் ஆளாகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

போட்டிகள் நிறைந்து முற்றிலும் வணிகமயமாகிவிட்ட இக்காலச்சூழலில் தோல்வி, ஏமாற்றம், பயம், குறிப்பிட்ட கெடுவுக்குள் அளவுக்கதிகமான வேலையை முடிக்க வேண்டிய கட்டாயம், போதுமான ஓய்வின்மை, சரியான தூக்கமின்மை  ஆகியவை மன அழுத்தம் ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

இவை தவிர நெருங்கிய உறவினரின் திடீர் மரணம், முதுமையில் தனிமை, காதல் தோல்வி ஆகியவையும், மது, சிகரெட், போதை மருந்து போன்ற கெட்ட பழக்கங்களும், மனஅழுத்தத்தை அதிகப்படுத்துகின்றன.மேலும் வாசிக்க