நல்வரவு

வணக்கம் !

Saturday 30 May 2015

பறவை கூர்நோக்கல் - 5 - தவிட்டுக்குருவி

தவிட்டுக்குருவி


தவிட்டுக்குருவி  - Yellow-billed Babbler  (Turdoides affinis)
தோட்டங்களிலும் புதர்ச்செடிகளிலும் அடிக்கடிக் காட்சி தரும் தவிட்டுக்குருவி, பெரும்பாலோர்க்குத் தெரிந்த பறவை.  உடலின் மேற்பகுதியும், தொண்டையும் சாம்பல் நிறத்தில் இருக்கும், அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.  இதற்குக் கல்குருவி, சிலம்பன் என்ற பெயர்களும் உண்டு.

பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து குருவிகள் சேர்ந்து கூட்டமாகக் காட்சியளிப்பதோடு, ஓயாமல் கத்திக் கொண்டே இருக்கும்.  சமயத்தில் அணில் குரலுக்கும், இதன் ஓசைக்கும் எனக்குக் குழப்பம் ஏற்படுவதுண்டு.  பூச்சிகளையும் தானியத்தையும் உணவாகக் கொள்ளும்.

குறிப்பிட்ட உயரத்திற்கு மேலோ, தொலை தூரத்துக்கோ தொடர்ச்சியாக பறக்க இயலாது என்பதால் வலசை செல்லாத பறவை.  தரையில் தத்தித் தத்தி நடக்கும்.  அடர்த்தியான மரங்களில் கூடு கட்டும்.  எங்கள் மாமரத்தில் ஒரு முறை கூடு கட்டியது. 

எங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து விட்டு வேறு குருவி என நினைத்துப் பறந்து பறந்து, அடிக்கடிக் கண்ணாடியைக் கொத்திக்கொண்டே இருக்கும்.
 அக்காக்குயில்(Common Hawk-Cuckoo)



இதற்கு அக்காகுருவி, அக்கக்கா குருவி என்ற பெயர்களும் உண்டு. உடலின் மேற்பகுதி சாம்பல் நிறத்திலும், வயிறு வெண்மையாகவும் இருக்கும். இக்குயிலை நான் பார்த்ததில்லை என்றாலும்,   இது பற்றி இப்பதிவில் சொல்லக் காரணமிருக்கிறது.

குயிலினத்தைச் சேர்ந்த பறவை என்பதால் அடைகாத்துக் குஞ்சு பொரிக்காது.  காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவது போல், தவிட்டுக்குருவி இனத்தைச் சேர்ந்த பறவைகளின் கூட்டில் இந்த அக்காக்குயில் முட்டையிட்டுவிடுமாம்.  தவிட்டுக்குருவி தான் அதன் குஞ்சுகளை வளர்க்குமாம்.

இது சம்பந்தமாக அருமையான இரு காணொளிகளைப் பார்த்து ரசித்தேன். அவசியம் நீங்களும் பாருங்கள்:-
இணைப்பு:- 1  https://www.youtube.com/watch?v=JtNHLtHbwxs
இணைப்பு:- 2  https://www.youtube.com/watch?v=SO1WccH2_YM
காணொளியில் நாணல் கதிர்க்குருவி  (Reed warbler) கூடு கட்டி முட்டை யிட்டிருக்கிறது.  அது வெளியே சென்றிருக்கும் சமயம், குயில் வந்து ஒரு முட்டையை விழுங்கி ஏப்பம் விடுகின்றது.  இன்னொன்றை அலகில் எடுத்துக்கொண்டு, தன் முட்டையைக் கூட்டில் இட்டு விட்டுப் பறந்துவிடுகின்றது.  இந்த வேலையை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றது! 
முட்டை மாற்றப்பட்ட உண்மை அறியாத கதிர்க்குருவி அடைகாக்கின்றது.  மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே முட்டையிலிருந்து வெளிவரும் குயில் குஞ்சு, பொரிக்காத மற்ற முட்டைகளைக் கூட்டிலிருந்து தன் முதுகால் அனாயாசமாகத் தூக்கி வெளியே தள்ளிவிட்டுத் தான் மட்டும், மொத்த தீனியைத் தின்று வளர்கின்றது. 
ஒண்ட வந்ததுமின்றிச் சொந்த குஞ்சுகளை வஞ்சகமாகக் கொன்ற இந்தச் சாத்தானின் உண்மை ரூபம் அறியாத கதிர்க்குருவிகள், ஓடி ஓடி உழைத்து உணவூட்டுகின்றன.  பாவம் இந்தப் பெற்றோர்!    

(நன்றி:- பறவைகள் அறிமுகக் கையேடு – ப.ஜெகநாதன் & ஆசை)                                                                                   (படங்கள் -  நன்றி இணையம்)  இதன் அடுத்த பகுதிக்குச் செல்ல         

Tuesday 26 May 2015

“பொன்னென மலர்ந்த கொன்றை”



ஏப்ரல், மே மாதங்களில் இலைகளை முழுவதுமாக உதிர்த்து விட்டு மரமுழுக்க பொன்மஞ்சள் மலர்களால் நிறைந்து, சரம் சரமாகத் தொங்கிக் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும் கொன்றை, நம் மண்ணின் மரங்களுள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 

இதன் தாவரப்பெயர் Cassia fistula.  Fabaceae குடும்பத்தைச் சேர்ந்தது.  இதன் வேறு பெயர்கள்:- ஆக்கொத்து, ஆர்கோதம், இதகுழி, கடுக்கை, கவுசி, கொண்டை, கொன்னை, சமிப்பாகம், சரக்கொன்றை, தாமம், நீள்சடையோன்.


தெற்காசியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் என்பதால், வெப்பத்தையும், வறட்சியையும் தாக்குப் பிடித்து வளரக்கூடியது.  அச்சிருபாக்கம், திருக்கோவிலூர்,, திருத்துறையூர் உள்ளிட்ட 20 சிவன்  கோவில்களில் தலமரமாக இருக்கும் சிறப்புப் பெற்றது.  தற்காலத்தில் தெருவோரங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.

கேரள மாநிலத்தின் மலர் என்பதோடு, அதன் புத்தாண்டு தினமான விஷு பண்டிகையின் பூஜைக்குரிய மலராகவும் இது விளங்குகிறது.  அங்கு இதன் பெயர் கனிக்கொன்னா அல்லது விஷு கொன்னா..  தாய்லாந்து நாட்டு மலரும் இதுவே.
 
இதன் காய்கள் பச்சையாக உருளை வடிவத்தில் இருக்கும்.  முற்றிப் பழமாகும் போது கருமைகலந்த காப்பிக்கொட்டை நிறமாகிவிடுகிறது.  முற்றிய கனியின் ஓட்டை உடைத்து, விதையை எடுப்பது அவ்வளவு எளிதாக இல்லை இதனுள்ளே வரிசையாகப் பிசுபிசுப்புடன் கூடிய சதைப்பற்றால் ஆன தடுப்புச்சுவர் அரண் போல் அமைந்திருக்க, ஒவ்வொரு அறையினுள்ளும், ஒரு விதை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு உள்ளது.    


முற்றிய பிறகு வெடிக்கக் கூடிய கனியாகவும் இது தோன்றவில்லை!   இவ்வளவு கடினமான ஓட்டிலிருந்து விதைகள் எப்படி வெளியே வருகின்றன? என்று எனக்கு வியப்பு.  இனப்பெருக்கத்துக்கு இயற்கை இதற்கென்று ஒரு வழி வைத்திருக்காமலா இருக்கும் என்று இணையத்தில் தேடியபோது, கிடைத்த விடை சுவாரசியமானது  

சங்கக்காலத்தில் காடும் காடு சேர்ந்த பகுதியுமான முல்லை நிலத்துக்குரிய மரமாகத் தான், இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்.

காடுகளில் வளரும் இம்மரத்தின் கனிகளை, இதன் பிசுபிசுப்பு நிறைந்த தித்திப்பான சதைப்பகுதிக்காக நரி, குரங்கு போன்ற விலங்குகள் விரும்பித் தின்னுமாம்.  இது மிகச் சிறந்த  மலமிளக்கி!  என்னே இயற்கையின் விந்தை!  எனவே சதைப்பகுதியுடன் உள்ளே போகும் விதைகள், இவற்றின் கழிவு வழியாக வெளியேறி பல்வேறு இடங்களுக்குப் பரவுமாம்.     

விதைகள் விரைவில் முளைவிட, நான்கு மணி நேரம் வெதுவெதுப்பான நீரிலும், பின்னர் 24 மணி நேரம் குளிர்ந்த நீரிலும் ஊறவைத்துப் பின் விதைக்க வேண்டுமாம்.
 
நாட்டு மருத்துவத்தில் தமிழர்கள் பயன்படுத்திய முக்கிய தாவரங்களில் இதுவும் ஒன்று.  ஆயுர் வேதத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பட்டை, பூ ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாயம் தோல், மற்றும் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டப் பயன்பட்டன. 


கொன்றை பற்றிய சங்கப் பாடல்கள் ஏராளமாக இருப்பினும், விரிவஞ்சி இங்கு இரண்டு மட்டும்:-

1.    பொன்னென மலர்ந்த கொன்றை மணிஎனத்
தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே!    (ஐங்குறுநூறு 420)
“முல்லை நிலமே! பொன் போல் மலர்ந்த கொன்றை, , நீல மணிபோல் பூத்த காயம்பூ, மலர்ந்த தோன்றிமலர்  ஆகியவற்றோடு சேர்ந்து நல்ல அழகு எய்தினாய்!.”

2.   புதுப்பூங் கொன்றைக் 
கானம், கார்எனக் கூறினும்
யானோ தேறேன்,அவர் பொய்வழங் கலரே”
(குறுந்தொகை : 21)
“கார் காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை.  திடீரென்று மழை பெய்ததால், கார் காலம் வந்து விட்டதாக  எண்ணி ஏமாந்து கொன்றை  பூத்துவிட்டது; ஆனால் நான் நம்ப மாட்டேன்   இது கார்காலம் இல்லை. அவர் பொய் சொல்ல மாட்டார் என்று தோழியிடம் தலைவி சொல்கிறாளாம்.”   

முதிர்ந்த கொன்றை மரத்தைக் கொண்டே, அக்காலத்தில் உலக்கை செய்தனர் என்கிறார், காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.

வீட்டின் முன்புறத்தை (Front elevation) ஆயிரக்கணக்கில் செலவழித்து அழகு படுத்த நினைப்பவர்கள், செலவின்றி ஒரே ஒரு கொன்றை மரத்தைத் தெருவோரத்தில் நட்டால் போதும்;

தங்கக் காசுகளைச் சரம் சரமாகக் கோர்த்துத் தொங்கவிட்டது போல் ஜொலிக்கும் பொன் மஞ்சள் மலர்கள், உங்கள் வாசலுக்குத் தனி அழகைக் கொடுக்கும்!

(கொன்றை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு நன்றி:- தமிழரும் தாவரமும் – முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி & விக்கிபீடியா)

(நான்கு பெண்கள் இணைய இதழில் 11/05/2015 அன்று வெளியானது)

Wednesday 13 May 2015

வானில் பறக்கும் புள்ளெலாம் - நூல் அறிமுகம்



ஆசிரியர் சு.தியடோர் பாஸ்கரன்
முதற்பதிப்பு:- டிசம்பர் 2011
இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2014
உயிர்மை வெளியீடு.

காட்டுயிர் துறையில் முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன்   ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து, இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள். 

இதில் இயற்கை சமன்நிலையைக் காக்க காடுகள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.  சுற்றுச்சூழல் சட்டங்கள், சூழலியல் கல்வி ஆகிய தலைப்புகளில் அமைந்துள்ள கட்டுரைகள், இவை பற்றிக் கூடுதலாக நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன.  . 

எளிமையான நடையில், இடையிடையே இவர் சொல்லிப் போகும் பல சுவாரசியமான தகவல்கள், வாசிப்பின் சுவையைக் கூட்டுகின்றன. 

நான் புதிதாகத் தெரிந்து கொண்ட பல்வேறு செய்திகளுள், சிலவற்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்:-

·         சுற்றுச்சூழல் சமன்நிலையிலிருக்க,  மொத்த பரப்பளவில் 33% காடு இருக்கவேண்டும்; ஆனால் தமிழ்நாட்டு நிலப்பரப்பில் 17.5% தான் காடு.

·         குஜராத்தின் நீண்ட வளைந்த கொம்புகளையுடைய காங்ரேஜ் இனம் தான் சிந்து சமவெளி சித்திர முத்திரையிலுள்ள காளை என அடையாளம் காணப்பட்டுள்ளது.  அவ்வளவு தொன்மையான மரபினங்களைக் கொண்டவை இந்திய இனங்கள்!

·         உயரம் குறைவான மணிப்புரி குதிரைகள் தாம் முதன்முதலில் போலோ விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டன.  வடகிழக்கு இந்தியாவில் மணிப்பூரில் ‘புலூ’ என்றறியப்பட்ட பாரம்பரிய விளையாட்டு தான் ‘போலோ’வாக மேலை நாடுகளுக்குப் பரவியது.
 
·         நிக்கோபாரில் மெகபோட் (Megapode) என்னும் அரியவகை தரைப்பறவை,  நிலத்தில் முட்டையிட்டு உலர்ந்த இலைகளால் ஒரு மேடு போல் மூடிவிடும்.  அடை காக்காமல் இலைக்குவிப்பை குறைத்தும், அதிகப்படுத்தியும் இன்குபேட்டர் போல இயக்கி வெப்பநிலையைச் சீராக்கி குஞ்சுகளைப் பொரிக்க வைக்கும்.  இதனை உயிரியலாளர் தெர்மோமீட்டர் பறவை (Thermometer bird) என்றழைக்கின்றனர்.

·         புதிய உயிரினங்கள் தோன்றுவது தீவுகளில் தான்.  சார்லஸ் டார்வின் பயணித்த கப்பல் தென்னமெரிக்காவுக்கு அருகில் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கலப்பாகாஸ் தீவுகளை அடைந்த போது, வேறெங்கும் காணமுடியாத பறவைகளும், கடல் ஓணான்களும், ராட்சத நிலத்தாமைகளும் இருப்பதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்.  அங்கிருந்த குருவிகளின் அலகுகளைக் கவனித்த போது தான் பரிணாமக்கோட்பாட்டின் தடயம் அவருக்குக் கிடைத்தது.  இதன் அடிப்படையில் பிராணிகள் உருவாகும் விதம் பற்றியும் மனிதனின் பரிணாமவழி தோற்றுவாய் பற்றியும் ORIGIN OF SPECIES நூலை எழுதி, அறிவுலகை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டார்   மத நம்பிக்கைகளின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது.

·         பள்ளியின் மதிய உணவு காண்டிராக்ட்காரர்கள், பல்லி விழுந்து உணவு கெட்டு விட்டதென்று திருப்பிப் பதில் சொல்ல முடியாத பல்லி மேல் பழி சுமத்துகிறார்கள்.  பல்லிக்குச் சிறிது கூட நஞ்சு கிடையாது.  பெரிய பல்லியான உடும்புக்கறியை, இன்றும் இருளர்கள் உண்கிறார்கள்.

·         நீரையும் பாலையும் பிரிக்கும் அன்னம், மழை நீரை உண்டு வாழும் சாதகப்புள் இவையிரண்டும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட தொன்மவழி விவரங்களே.  பட்டைத் தலை வாத்து (BARRED HEADED GOOSE) தான் அன்னம் என்றழைக்கப்பட்டது என்பது என் யூகம்.  .   இது உயிரியல் ரீதியாக ஸ்வான் (SWAN) இனத்தைச் சேர்ந்தது.

·         தற்காலத்தில் பறவைகளின் கால்களில் வளையத்தைப் பொருத்துவதற்குப் பதிலாக சிறு ‘சிப்’ (Chip) ஒன்றை உடலில் பொருத்தி விண்கோள் வழியாக வலசை போகும் பாதையையும் வேகத்தையும் கணக்கிடுகிறார்கள்.  வலசை போகும் பாதையை ‘வான்வழி’(Skyway) என்கிறார்கள்.  இந்த விண்பாதை கடலோரமாகவே அமைந்திருக்கும்.  சமுத்திரத்தைக் கடப்பதைப் பறவைகள் முடிந்தவரை தவிர்க்கின்றன.

·         ஒரு முறை பேருள்ளான் என்ற புறா அளவிலான பறவை, வட அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து உலகின் அடுத்த கோடி நியுசிலாந்துக்கு வலசை சென்றது பதிவாகியிருக்கிறது.  17460 கி.மீ தூரத்தை இது 9 நாட்களில் கடந்துள்ளது.  மூன்றே இடங்களில் இரையுண்ணத் தரையிறங்கியது.  நான்காவது கட்டத்தில் 11000 கி.மீ தூரத்தை இரவு பகலாக ஒரே மூச்சில் பறந்து, நியூசிலாந்து மிராண்டா என்ற இடத்தில் பெரிய கூட்டமாகத் தரையிறங்கியது. 


இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலான வற்றில் தேதியில்லாதது பெருங்குறை.  எடுத்துக்காட்டாக ‘அண்மையில்’ என்ற குறிப்பிருப்பதால், மேலே குறிப்பிட்ட பேருள்ளான் பறவை, இப்படி ஒரே மூச்சில் வலசை போனது எப்போது என்ற விபரத்தை, நம்மால் அறிய முடியவில்லை. 
எனவே பல்வேறு தேதிகளில் எழுதப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் போது, ஒவ்வொன்றிலும் அது எழுதப்பட்ட தேதியைத் தவறாமல் குறிக்க வேண்டும்.   


சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகள் என்பதால், இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி, எல்லோருமே வாசிக்க வேண்டிய நூல் என்பது என் கருத்து.


(நான்கு பெண்கள் இணைய இதழில் 27/04/2015 வெளியானது)



Sunday 3 May 2015

"முட்டையிலிருந்து என்ன வரும்?"




காட்டுயிர் எழுத்தாளர் திரு சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘வானில் பறக்கும் புள்ளெலாம்,’ நூலை அண்மையில் வாசித்தேன்.  உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் இவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.   உயிர்மை வெளியீடு. .இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2014.